Main Menu

தௌஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்யும் வர்த்தமானி வெளியானது!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு, வில்லயத் அஸ் ஸெய்லானி மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் அமைப்பு ஆகியவற்றை தடைசெய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகளையும் தடைசெய்து, அவற்றின் சொத்துக்களை முடக்கும் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தபோதும், அதற்கான வர்த்தமானி வெளியிடப்படாமல் காணப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொடவின் ஒப்புதலுடன் தற்போது இவற்றிற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹரான் தௌஹீத் ஜமாத் அமைப்புடன் இணைந்து செயற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு, இந்த அமைப்பின் அலுவலகங்களாக வணக்கஸ்தலங்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதேவேளை, தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்ற அதேவேளை, இந்த அமைப்பினர் மேலும் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த பலர் தலைமறைவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் சரணடைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...