Main Menu

தைத்திருநாள் : தலைவர்களின் வாழ்த்துச் செய்தி

தமிழர் திருநாளாம் தை திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மங்களகரமான வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், கலைகள், பண்டிகைகள் ஆகியவற்றை பாதுகாத்திட தீர்மானம் எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பைக் கொண்டுவரட்டும் என்றும், அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் இருந்து அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்று வாழ வாழ்த்துவதாக ஆளுநர் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கான சட்ட திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், இந்த பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும். உழவர்கள் மகிழட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அனைவரின் வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவி நாட்டின் நலமும், வளமும் பெருக வாழ்த்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன், நகைக் கடன், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். தமிழக மக்கள் வாழ்வில் இருள் அகன்று, வளமும், நலமும் வெளிச்சம் பாய்ச்சிடத் தமிழர் திருநாளை வரவேற்போம் எனக்  கூறியுள்ளார்.

பகிரவும்...