Main Menu

தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை – சவுதி இளவரசர் தொடர்பு குறித்து விசாரணை

தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விரிவான விசாரணை நடத்த ஐ.நா. சபை சிறப்பு பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய அரசை கடுமையாக விமர்சித்து வந்த அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் காசோகி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சவுதி அரேபிய உளவாளிகள் சிலர் மீது சவுதி அரேபிய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

அதே சமயத்தில், இக்கொலை பற்றி விசாரணை நடத்திய ஐ.நா. சபை சிறப்பு பதிவாளர் ஆக்னஸ் கல்லமர்டு தனது அறிக்கையை நேற்று வெளியிட்டார்.

அதில், ‘‘காசோகி கொலைக்கு சவுதி அரேபியாவே பொறுப்பு. இந்த கொலையில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் சவுதி உயர் அதிகாரிகள் தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு நம்பகமான ஆதாரம் கிடைத்துள்ளது. பட்டத்து இளவரசருக்கு தொடர்பு இல்லை என்று நிரூபணமாகும் வரை அவரது தனிப்பட்ட சொத்துகளை முடக்கிவைக்க வேண்டும். சவுதி அரேபியா நடத்தும் விசாரணை, சர்வதேச தரத்துக்கு இல்லை. எனவே, அதை கலைக்க வேண்டும். இந்த அறிக்கை பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

பகிரவும்...