Main Menu

தீர்மானம் இன்றிக் கலைந்தது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

தீர்க்கமான தீர்மானங்கள் எதுவுமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (புதன்கிழமை) கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் இடம்பெற்ற நிலையிலேயே எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாமல் சுமார் ஒன்றரை மணித்தியாலம் நீடித்த கருத்து பரிமாற்றம் நிறைவடைந்ததாக தெரியவருகின்றது.

குறித்த கருத்துப் பரிமாற்றத்தில், பிரதான வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச சார்ந்த இரண்டு தரப்புக்களும் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த பேச்சுக்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

அந்த அடிப்படையில், நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வையும் நோக்கமாக கொண்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஆரம்ப செயற்பாடுகளில் பொதுஜன பெரமுன சார்ந்தவர்களும் சம்மந்தப்பட்டிருந்தனர் என்ற அடிப்படையில் இரண்டு தரப்பிடமும் அதனை முன்கொண்டு செல்வது தொடர்பான கோரிக்கையை முன்வைப்பது தொடர்பாக யோசிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டுவதற்கு குறிப்பிடத்தக்களவு காலம் தேவைப்படுவதால், இடைப்பட்ட காலத்தில் 13ஆம் திருத்தச் சட்டத்தை முடிந்தளவு முழுமையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் செயற்படுத்துவது தொடர்பான உத்தரவாத்தை பெறுவது தொடர்காகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

எது எவ்வாறு இருப்பினும் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்வதற்கு பிரதான தரப்புக்கள் இரண்டும் தயாராக இல்லாத நிலையில், அவர்களுடைய நிலைப்பாட்டில் இருக்கும் நியாயத்தை கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் நேற்றைய கூட்டத்தில் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, அவசரப்பட்டு தீர்மானம் எதனையும் மேற்கொள்ளாது தங்களால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலாவது இடம்பெறச் செய்யும் வகையில் அவர்களுடனான கருத்தாடல்களை மேற்கொள்வது எனவும் வாக்களிப்பு தினம் நெருங்குகையில் கள நிலவரங்களை கணித்து தீர்மானத்தை அறிவிக்கலாம் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட சில தலைவர்களின் கருத்து அமைந்திருந்ததாகவும் தெரிய வருகின்றது.

எவ்வாறாயினும் கூட்டமைப்பு தலைவர்கள் பெரும்பாலானோர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதிலேயே ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கின்ற உள்ளக தகவல்கள் சில, ஒருவேளை களநிலவரங்கள் கோட்டாபயவிற்கு ஆதரவாக இருக்குமாயின் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பும் சிறிதளவு காணப்படுவதாக தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கலந்துகொண்ட நேற்றைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ரெலோ அமைப்பின் தலைவர் செல்லம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...