Main Menu

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னெடுப்பு

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்த நிலையில் நாளை முதல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மீள திறப்பதற்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரினால் அனுமதியளிக்கப்பட்டது.

அதற்கமைய யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் பிரதேச சபையினரால் திருநெல்வேலி சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னேடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தையில் 245க்கும் மேற்பட்ட மரக்கறி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக சமூக இடைவெளியை பேணவேண்டிய நிலை காணப்படுகின்றமையினால் பொதுச் சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சந்தைக்கு வரும் பொது மக்களுக்கிடையில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலையில் இட ஒதுக்கீடுகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறு முன்னெடுக்கப்பட்டன.

இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய நாளை திருநெல்வேலி பொதுச்சந்தை அதிகாலை 5 மணி முதல் மக்கள் பயன்பாட்டுக்காக மீளத் திறக்கப்படவுள்ளது.

குறித்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் வகையில் இட ஒதுக்கீடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் இன்றைய இட ஒதுக்கீட்டின்போது சில முரண்பாடுகள் சந்தை வியாபாரிகளுக்கும் எமக்கு இடையில் ஏற்பட்டது.

சந்தை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் சிலர் குறித்த பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் ஒருவர் இதுவரை காலமும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்ததாகவும் அதனை தமக்கு தற்போதைய சூழ்நிலையிலும் வழங்குமாறு கேட்டுக்கொண்டதால், அந்த முரண்பாடு ஏற்பட்டது.

எனினும் அனைவரையும் சமாதானம் செய்து இட ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளோம்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து சமூக இடைவெளி பின்பற்றல் போன்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், நாளை அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை திருநெல்வேலி பொதுச்சந்தை நடடிக்கை வழமைபோல் இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது” எனதெரிவித்தார்.

பகிரவும்...