Main Menu

தமிழர்கள் தொடர்ந்தும் வல்லரசுகளால் கையாளப்படும் ஒரு தரப்புதானா.?

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக இருப்பவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் அரசியல் விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரியாக இருந்தவர்.

1990ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை வெளியேறியதன் பின்னர் இவரை கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா உல்லாச விடுதியில் டெலோ இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் சந்தித்திருக்கிறார்கள்.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட சிவாஜிலிங்கம், ஜெய்சங்கரை நோக்கி எதிர்காலங்களில் நீங்கள் பெரிய பொறுப்புகளை வகிக்கும் பொழுது நமது பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்குமோ தெரியாது என்று கூறியிருக்கிறார்.

இச்சந்திப்பின் போது, ஜெய்சங்கர் தனது சிறிய மகனையும் அழைத்து வந்திருக்கிறார். அவர் தன்னுடைய மகனை சுட்டிக்காட்டி சொன்னாராம் “இல்லை இந்த பையன் வளர்ந்து பெரியவன் ஆனாலும் கூட உங்களுடைய பிரச்சினை தீரப்போவதில்லை”என்று.

இப்பொழுது ஜெய்சங்கர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக இருக்கிறார். அவர் கூறியது போலவே அவருடைய மகன் இப்பொழுது வளர்ந்து நடுத்தர வயதை அடைந்து விட்டார். ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினை இப்பொழுதும் தீர்க்கப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை ஏன் இன்னமும் தீர்க்கப்படவில்லை?

ஜெய்சங்கர் கொழும்பில் சேவையாற்றிய அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளராகிய பன்னீர்செல்வம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவர் மாத்தையா உயிருடன் இல்லை என்ற தகவலை முதன்முதலாக அன்டன் பாலசிங்கம் இவர் மூலமாகத்தான் வெளியுலகுக்கு அறிவித்தார்.

பன்னீர்செல்வம் யாழ்ப்பாணத்தில் என்னைக் கண்டபோது ஒரு விடயத்தை சுட்டிக் காட்டினார், ஈழத்தமிழர்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை அடைவதற்கு தயாரில்லை என்று ஓர் அபிப்பிராயம் பரவலாக உள்ளது. தீர்வு விடயத்தில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வரத் தயாரில்லை என்று ஒரு கருத்து உண்டு என்று அவர் கூறினார்.

இவர் அதைச் சொல்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்து பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ராம் அதை வேறு மொழியில் கூறியிருந்தார். அதாவது? புலிகள் இயக்கம் ஏக சிந்தனை கொண்ட ஒரு இயக்கம் single-minded என்று ராம் வர்ணித்திருந்தார்.

ஆனால், இப்படிப்பட்ட விமர்சனங்களை 2009இற்குப் பின்னர் யாரும் முன்வைக்க முடியாது. ஏனென்றால் இப்பொழுது தமிழ் அரசியலில் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒன்றே கிடையாது.

ஆங்காங்கே உதிரிகளாக ஒருங்கிணைக்கப்படாது காட்டப்படும் எந்த ஒரு எதிர்ப்பும் இலங்கை அரசாங்கத்தையோ அல்லது அனைத்துலக சமூகத்தையயோ திரும்பிப் பார்க்க வைக்கும் பலம் கொண்டவை அல்ல.

தவிர, கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக காணப்பட்ட கூட்டமைப்பு, அரசாங்கத்துக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் அடியொட்ட வளைந்து  கொடுத்தது. இதற்கு டிலான்  பெரேராவின் வார்த்தைகளைக் கூறினால் ‘சம்பந்தரைப் போல விட்டுக் கொடுக்கும் ஒரு தலைவர் இனிமேல் கிடைக்க மாட்டார்’ என்று கூறுமளவுக்கு கூட்டமைப்பு விட்டுக் கொடுத்தது.  எனவே தீர்வு கிடைக்காதற்கு கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தரப்பு பொறுப்பல்ல.

அடுத்தது அரசாங்கம். தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை கொடுக்கத் தயாரில்லை. உலகின் வளர்ச்சியடைந்த நாகரிகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமஷ்டித் தீர்வை சிங்களத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.

சிங்கள மக்கள் மத்தியில் மிகத் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒரு சொல் சமஷ்டி ஆகும். இந்நிலையில் சமஷ்டி இல்லாத ஒரு தீர்வை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு ‘எக்க ராஜ்ய’ என்று கூறி ஒரே நேரத்தில் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் சமாளிக்கும் ஒரு போக்கைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் காணமுடிந்தது.

எனவே, இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு அடிப்படைக் காரணம் இலங்கை அரசாங்கம்தான். தீர்வு என்று அவர்கள் கருதுவது தமிழ் மக்களை தோற்கடிப்பதைத்தான். தமிழ் மக்களை எப்படி வெளித் தரப்புக்களின் உதவியோடு ஒரு தீர்வு அற்ற தீர்வுக்குள் பெட்டி கட்டலாம் என்றுதான் அவர்கள் சிந்திக்கின்றார்கள்.

மாறாக தமிழ் முஸ்லிம் மக்களோடு கௌரவமான விதங்களில் உலகம் ஏற்றுக்கொண்ட விதங்களில் இலங்கைத் தீவை பங்கிடுவதற்கு சிங்களத் தலைவர்களிடம் ஒன்றில் விருப்பம் இல்லை. அல்லது துணிச்சல் இல்லை. அல்லது திராணியில்லை. இது இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம், வெளித் தரப்புக்கள். இச்சிறிய தீவு மீதான தமது செல்வாக்கை உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாகவே வெளித் தரப்புகள் இனப் பிரச்சினையைக் கையாண்டு வருகின்றனவே தவிர இனப் பிரச்சினையை ஒரு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகக் கருதிக் கையாளவில்லை.

இந்திய-இலங்கை உடன்படிக்கையிலும் சரி ஐ.நா.வின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமும் சரி தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட உடன்படிக்கைகள் அல்ல. எனவே, வெளிதரப்புக்கள் தமிழ் மக்களை அணுகும் பொழுது கொழும்பில் இருக்கும் அரசாங்கத்துக்கூடாகவே அணுகுகின்றன.

தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்று தமிழ் தரப்புக்கும் சிங்களத் தரப்புக்கும் இடையில் பெரிய வெள்ளி உடன்படிக்கை போன்று ஓர் உடன்படிக்கை உருவாக்குவதற்கு எந்தவொரு வெளித் தரப்பும் தயாரில்லை.

குறிப்பாக, இந்தியா கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைதான் ஒரு தரப்பாகக் கருதி கையாண்டு வருகிறது. இது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவு. ஒரு அரசுடைய தரப்பாக இருப்பதனால் சிங்களத் தரப்புக்கு அது எப்பொழுதும் அனுகூலமானது.

மாறாக தமிழ் மக்களை ஒரு தரப்பாகக் கையாள இந்தியா தயாரில்லை. அப்படிக் கையாளுவதாக இருந்தாலும் கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிப்பதற்கான ஒரு கருவியாகவே இந்தியா தமிழ் மக்களைக் கையாண்டு வந்திருக்கிறது.

இப்படிப்பட்டதோர் துயரமான வரலாற்றுப் பின்னணியில் கொவிட்-19இற்குப் பின்னர் துருவமயபட்டுவரும் உலகில் மறுபடியும் இலங்கை தீவை நோக்கி எல்லா பேரரசுகளும் மொய்க்கத் தொடங்கி விட்டன.

கடந்த சில மாதங்களுக்குள் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் இலங்கை தீவை தமது செல்வாக்கு மண்டலத்துக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகின்றன.

இலங்கை தீவு தன்னை ஒரு அணிசேரா நாடு என்று கூறிக் கொண்டு எல்லாப் பேரரசுகளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தன்னை சுதாகரித்துக் கொள்கிறது. இதில் மிகப் பிந்திய செய்தி கடந்த செவ்வாய்க் கிழமை கிடைத்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி நடந்த ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மோடியிடம் ஒரு விடயத்தைப் பற்றி பேசியிருந்தார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை இந்தியாவிடம் தருவதற்கு அவர் உடன்பட்டிருந்தார். எனினும், சீனா அதை எதிர்த்த காரணத்தால் அந்த விவகாரம் தொடர்ந்து இழுபறியில் இருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை கிடைத்த ஒரு செய்தியின் படி இந்தியாவின் அதானி குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அந்த முனையத்தை நிர்மாணிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதாவது, சிறிய இலங்கைத் தீவு எல்லா பேரரசுகளுக்கும் எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு நிலை.

ஏற்கனவே, கொழும்பு துறைமுகத்தின் மேற்குப் பகுதியில் சீனா ஒரு நகரத்தை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனம் ஒன்றுக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு கொடுக்கப்பட்டு விட்டது.

அத்துறைமுகத்திலிருந்து 20 நிமிட பயணத்தில் சென்றடையக் கூடிய மத்தள விமான நிலையத்தை இந்தியா கேட்கிறது. ஆனால், இலங்கை அரசாங்கம் பதில் கூறப் பின்னடிக்கின்றது.

அதைப்போலவே, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்துகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டன. கொவிட்-19 சூழலுக்குள் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இதுதவிர, காங்கேசன்துறை முகத்திலிருந்து காரைக்காலுக்கு ஒரு படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து அவ்வாறு ஒரு படகுச் சேவையை தொடங்கும் திட்டம் ஒன்றும் உண்டு. இவையாவும் எதைக் காட்டுகின்றன? தமிழ் பகுதிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இடைத் தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் விதத்தில் இந்தியா நகர்வுகளை முன்னெடுக்கின்றது.

ஒருபுறம் இந்தியா தமிழ் பகுதிகளின் மீது தனது பிடியை இறுக்க முயற்சிக்கின்றது. இன்னொரு புறம் சீனா தெற்கில் தனது பிடியை இறுக்க முயற்சிக்கின்றது. இவைதவிர அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஐ.நா. தீர்மானத்தின் மூலம் இலங்கை தீவை சுற்றி வளைக்கின்றன.

இந்த மூன்று பேரரசுகளும் கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை என்றால் மறுபடியும் தமிழ் மக்களின் விவகாரத்தை கையில் எடுப்பார்கள். அதை ஒரு கருவியாகக் கையாண்டு அதன்மூலம் கொழும்பின் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகிப்பார்கள்.

ஏற்கனவே, அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு பயணத் தடை விதித்திருக்கிறது. ஏனைய சில மேற்கு நாடுகளும் அவ்வாறு பயணத் தடை விதித்திருக்கின்றன. குற்றஞ் சாட்டப்படும் தளபதிகள் வெளி நாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்படும் பொழுது எதிர்ப்பு காட்டப்படுகிறது.

கடந்த புதன்கிழமை இலங்கைக்கு வந்த பொம்பியோ பொறுப்புக்கூறல் பற்றி கதைத்திருக்கிறார். பொறுப்புக்கூறல் என்றால் அது நிலைமாறுகால நீதிதான். நிலைமாறுகால நீதி என்றால் அது ஐ.நா.வின் 30/1 தீர்மானம்தான்.

அதேசமயம், பொம்பியோ வருவதற்கு சில கிழமைகளுக்கு முன்பு இலங்கைக்கு வந்து போன சீனத் தூதுக்குழு ஜெனிவாவில் தாம் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்போம் என்று உறுதியளித்துள்ளது. இது மேற்கிற்கு எதிரானது மட்டுமல்லாது இலங்கை இனப் பிரச்சினையில் சீனா நேரடியாகத் தலையிடும் ஒரு கொள்கை மாற்றத்தைக் காட்டுகிறதா?

எனவே, தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு அழுத்தப் பிரயோகப் கருவியாக எல்லா பேரரசுகளும் கையாளப் பார்க்கின்றன. இதன் அர்த்தம் தமிழ் மக்களின் பேரம் அதிகரிக்கிறது என்பதுதான். ஆனால், அந்தப் பேர பலத்தை பிரயோகிப்பதற்கு தமிழ் மக்களிடம் எந்தவொரு நிறுவனக் கட்டமைப்பும் கிடையாது.

தமிழ் மக்கள் வெளியாருக்காக காத்திருக்கிறார்கள். வெளியாரை கையாளத் திராணியற்று வெளியாருக்காக காத்திருக்கும் இந்த நிலை தொடரும் வரை இனப் பிரச்சினை தீரப்போவதில்லை.

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

பகிரவும்...