Main Menu

தமிழர்கள் மீது தவறாக பயன்படுத்தப்படும் சட்டங்கள் -ப.உதயராசா!

தமிழர்கள்மீது தவறாக பயன்படுத்தப்படும் சட்டங்கள்!, மாணவர்கள் மற்றும் அஜந்தனின் கைதுகள் மூலம் அம்பலம் . – ப.உதயராசா-

கடந்த 21/04/2019 கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலினால் முழு இலங்கையர்களும் ஒன்றிணைந்து இந்த சவாலை முறியடிக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாக யாழ் .பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரும் செயலாளரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அமைந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு கொடிய தாக்குதலுக்கு காரணமான சர்வதேச மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகளை அடக்கவென அவசரகாலச் சட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றிவிட்டு பழக்கதோசத்தில் தமிழர்களை கைது செய்வதிலும் சோதனை செய்வதிலும் பாதுகாப்பு தரப்பு தீவிரம் காட்டிவருவது பலத்த சந்தேகங்களை ஏற்ப்படுத்தியுள்ளது.

தீவிரவாத தாக்குதல்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக மாணவர்களின் பாதுகாப்புக்கருதி பல்கலைக்கழக வளாகத்தை சோதனை செய்வதாக உள்ளே நுழைந்த பாதுகாப்பு தரப்பு மாணவ பிரதிநிதிகளை வெறுமனே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது பழைய புகைப்படம் இருந்ததாகவும் சில ஜனநாயக போராட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பதாதைகளையும் வைத்து அவர்களை கைதுசெய்வதென்பது பிறிதொரு நிகழ்ச்சிநிரலின் கீழ் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகவே எண்ணத்தோன்றுகின்றது.

கடந்த கால கசப்புணர்வுகளை கடந்து இந்த பேரழிவின் பின்னர் தமிழ்மக்கள் தாம் இலங்கையர் என்றும் இந்த நாட்டை முதலிலே பாதுகாக்க வேண்டும் பின்னர் எமது உள்நாட்டு பிரச்சனைகளை பார்த்துக்கொள்ளலாம் என எண்ணத் தலைப்படும்போது நீங்கள் இலங்கையர்கள் இல்லை தமிழர்கள் என மீண்டும் உணர்த்தும் வைகையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை தமிழ் மக்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் மீண்டுமொரு குழப்பத்தையும் வெறுப்புணர்வையும் தோற்றுவித்துள்ளது.

தீவிரவாத செயற்பாடுகளை ஊக்குவித்த அல்லது காரணமாக இருந்த பலரை அனைவரும் இணைந்து இனங்கானவேண்டியுள்ள சூழலில் துப்பாக்கி ரவைகளையும் இராணுவ உயர் அதிகாரிகளுடைய இலட்சனைகளையும் வைத்திருந்தவர்கள் ஒரேநாளில் விசாரிக்கப்பட்டு வீடு திரும்பும்போது அப்பாவி மாணவர்களை மட்டும் விளக்க மறியலில் வைத்துள்ளமை என்பது இந்த நாட்டின் பயகரவாத தடைச்சட்டமும் அவசரகால சட்டமும் தமிழ் மக்களுக்கு மட்டுமே எதிரானது என்பதையும் , பெரும்பான்மையினருக்கோ அல்லது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பவர்களின் ஆதரவாளர்களுக்கோ இந்த சட்டம் பாதிப்பை ஏற்ப்படுத்தாது என்பதனையும் மீண்டுமொருமுறை நிருபித்துள்ளது.

இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றி ரணில் விக்ரமசிங்கே அவர்களை மீண்டும் பிரதமராக்கினோம் என மார்தட்டிக்கொள்ளும் தமிழ் அரசில்வாதிகளால் இந்த தமிழ் மக்களையும் இளைஞர்களையும் ஒருபோதும் பாதுகாக்க முடியாது என்பதனையும் இந்த சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்டு சிறையில் வாடும் மாணவர்களை மீட்டு அவர்கள் தமது கல்வியை தொடர அனைத்து தரப்புக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதே காலத்தின் தேவையாகவுள்ளது. இவர்களைவிடவும் வடக்கின் பல பாகங்களிலும் தமிழ்மக்கள் இந்த அவசரகால நிலைமையினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் கைதாகி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர், பலர் தமது சுதந்திரமான நடமாட்டத்தை இழந்துள்ளனர். எனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் பூரண ஆதரவோடு ஆட்சி நடத்திவரும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்க்காமல் நீதியாக செயற்படுதல் வேண்டுமென வலியுறுத்தி நிற்கின்றோம்.

அதேவேளை கடந்த வருடம் இடம்பெற்ற வவுணதீவு பொலிசாரின் கொலை சம்மந்தமாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைப்பட்டிருக்கும் முன்னாள் போராளியும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான கதிர்காமத்தம்பி ராசகுமாரன் [அஜந்தனின்] கைது இந்த நாட்டில் அனைத்து தரப்பினரும் செய்கின்ற குற்றங்கள் தமிழ் மக்கள் மீதும் முன்னாள் போராளிகள் மீதும் எவ்வாறு இலகுவாக சுமத்தப்படுகின்றது என்பதற்கான சிறந்த உதாரணமாகும். இந்த குற்றமும் செய்யாத குடும்பஸ்த்தர் ஒருவரை கைது செய்து அவரே இந்த கொலையை செய்தார் என்பதுபோல ஆதாரங்களை தயார் செய்து அடைத்து வைத்து அவரது குடும்பத்தை வீதிக்கு கொண்டுவந்ததன் விளைவு நாடு பாரிய அழிவை சந்திக்க காரணமாயிற்று அந்த கொலை நடந்த உடன் முன்னாள் போராளி மீது பலிசுமத்துவதை விடுத்து சரியான முறையில் விசாரணை செய்திருந்தால் இந்த நாசகார கும்பலை கைது செய்து உயிர்த்தஞாயிறு தாக்குதலைக்கூட தடுத்திருக்கலாம்.

இந்த தவறுகளை முன்மாதிரியாக கொண்டு முன்னாள் போராளியான அஜந்தனையும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் , செயலாளரையும் விடுதலை செய்து இனிவரும் காலங்களிலாவது உண்மையான தீவிரவாதிகளை கைது செய்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு தரப்பு செலாற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.

நன்றி

ப.உதயராசா

செயலாளர் நாயகம்

சிறி ரெலோ.

பகிரவும்...