Main Menu

காலம் கடந்து விட்டது: இந்திய-இலங்கை உடன்படிக்கை இப்போது உயிர்ப்புடன் உள்ளதா?

கடந்த நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டு கிளையின் அனுசரணையோடு நியூ இந்தியா போறம் (New India Forum)  என்ற அமைப்பினால் ஒரு மெய்நிகர் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

‘இலங்கை யாப்பின் 13ஆவது திருத்தத்தில் இந்தியாவின் வகிபாகம்’ என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை முதல்வருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார். குறித்த கருத்தரங்கில் அவரோடு இந்திய வெளியுறவுத் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி அ.நடராஜனும் உரையாற்றவிருந்தார்.

கிட்டத்தட்ட 150இற்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நடராஜன் வருகை தரவில்லை. அவர் ஒரு தமிழர். இலங்கை தீவில் கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் பல ஆண்டுகள் வேலை பார்த்தவர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர் இந்திய துணைத் தூதராக இருந்த காலகட்டத்தில் உள்ளூர் மக்களோடும் சமூகப் பிரமுகர்களோடும் அதிகமாக இடையூடாடியவர்.

அவருக்கு யாழ்ப்பாணத்தில் நெருக்கமான நண்பர்கள் உண்டு. தொடர்புகளும் உண்டு. இப்படிப்பட்ட ஒருவர் அந்தக் கருத்தரங்கில் தனது தரப்பு கருத்துக்களையும் கூறியிருந்தால் அந்தக் கருத்தரங்குக்கு வேறு ஒரு பரிமாணம் கிடைத்திருக்கும். அவர் அதில் பங்குபற்றவில்லை. அதற்கு ஏதும் அரசியல் காரணங்கள் இருக்குமா? மேலும் கருத்தரங்கின் முடிவில் கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்கு நேரம் போதாது என்றும் கூறப்பட்டது.

விக்னேஸ்வரன் 13ஆவது திருத்தத்தின் கீழ் ஒரு முதலமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் அதன் போதாமைகள் குறித்து தனது சொந்த அனுபவங்களை அதிகமாகப் பகிர்ந்துகொண்டார்.

அவருடைய உரையின் ஒரு பகுதி வருமாறு, “இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டித் தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய–இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கமுடியாது. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

விக்னேஸ்வரன் குறிப்பிடுவது போல இந்திய-இலங்கை உடன்படிக்கையை ஒரு கருவியாகக் கையாள்வதற்கு அது இப்போதும் உயிருடன் உள்ளதா? இல்லை என்பதே கடந்த சில தசாப்த கால பிராந்திய நடைமுறை ஆகும்.

எவ்வாறெனில், இந்திய-இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இரண்டு அரசாங்கங்களுக்கு இடையே செய்யப்பட்ட ஒன்று. அது இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கானது என்று கூறப்பட்டது. ஆனால், இனப் பிரச்சினையில் ஒரு தரப்பாகிய தமிழ் தரப்பு அதில் கையொப்பம் இடவில்லை. எனவே அதில் தமிழ் மக்களுக்கு எந்தக்கூட்டுப் பொறுப்பும் கிடையாது.

ஆனால், தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தின் விளைவே அந்த உடன்படிக்கை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ஒரு கருவியாகக் கையாண்டு இந்தியா அந்த உடன்படிக்கையை செய்துகொண்டது என்பதே உண்மை. அந்த உடன்படிக்கை இனப் பிரச்சினைக்கான தீர்வுக்குரியது என்று கூறப்பட்ட போதிலும் அந்த உடன்படிக்கையின் இதயமான பகுதி அதில் பின்னிணைப்பாக காணப்படும் கடிதங்களில்தான் இருக்கிறது.

இலங்கை தீவை எந்தவொரு வெளிநாடும் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக பயன்படுத்தக்கூடாது என்று அக்கடிதங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கை எழுதப்பட்டது கெடுபிடிப்போரின் இறுதிக்  காலகட்டத்தில்.

அப்பொழுது, இலங்கை தீவை ஆட்சிசெய்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமெரிக்காவின் விசுவாசியாக இருந்தது. இந்தியாவில் இருந்த இந்திரா காந்தியின் அரசாங்கம் மொஸ்கோவின் நட்பு சக்தியாக இருந்தது. எனவே, கெடுபிடிப்போரை அவர்கள் இலங்கை தீவில் முன்னெடுத்தார்கள்.

இவ்வாறாக, உலகளாவிய கெடுபிடிப் போர் ஒன்றின் வியூகத்தில் சிக்கி அதிகமாக இரத்தம் சிந்தியது தமிழ் மக்களே என்பதுதான் இதில் உள்ள கொடுமையான அம்சம். தமிழ் மக்களின் இரத்தத்தாலும் தியாகத்தாலும் உருவாக்கப்பட்ட அந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அதைவிடக் கொடுமை.

இந்திய-இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில் சீனா உலக வல்லரசுகளுக்கு சவாலான ஒரு பொருளாதாரப் பேரரசாக எழுச்சி பெற்றிருக்கவில்லை. பட்டியும் பாதையும் என்ற ஓர் உலகளாவிய வியூகத்தை வைத்துக் கொண்டு ஏழை நாடுகளை தன் கடன் பொறிக்குள் சிக்க வைத்திருக்கவும் இல்லை.

அக்காலகட்டத்தில் சீனா, நெப்போலியனின் வார்த்தைகளில் சொன்னால் அமைதியாக உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்த ஓர் அரக்கன். அது உறக்கத்தில் இருப்பது போல நடித்துக்கொண்டே முதலாளித்துவ கட்டமைப்பின் திறந்த சந்தைப் பொருளாதாரத்தை மிகக் கெட்டித்தனமாகப் பயன்படுத்தி இப்பொழுது உலகின் ஆகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்து விட்டது.

அது மட்டுமல்லாது வறிய நாடுகளை தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்துவிட்டது. பட்டியும் பாதையும் என்ற உலகளாவிய வியூகத்தின் மூலம் உலகின் பெரும்பாலான நாடுகளை தன்னை நோக்கி இணைக்கும் தரைவழி மற்றும் கடல் வழி வலையமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது. இவ்வாறாக சீனாவின் எழுச்சிக்குப் பின்னரான ஒரு காலகட்டத்தில் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கை செல்லுபடியாகுமா?

நிச்சயமாக இல்லை. ஏனெனில், சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கிய நாடுகளில் ஒன்றுதான் ஸ்ரீலங்காவும். அதன் விளைவாகப்  பட்ட கடன்களை திருப்பி கொடுக்க முடியாத இலங்கை அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு எழுதிக் கொடுத்துவிட்டது. இலங்கைத் தீவின் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு சீனர்கள் இச்சிறிய தீவில் பிரசன்னமாகி இருக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது ஆட்சிக் காலகட்டத்தில் இந்தியா, இலங்கைத் தீவின் மீது தலையிடலாம் என்ற ஓர் ஊகம் எழுந்த பொழுது தயான் ஜயதிலக்க ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.

சீனா, இந்தியாவில் இருந்து 400 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. இந்நிலையில் இந்தியா தமிழர்களுக்குச் சார்பாக இலங்கை தீவின் மீது தலையிட்டால் அதன் எதிர்விளைவாக சீனா தென்னிலங்கையில் இறங்கும். அப்படி இறங்கினால் கற்பிட்டி வரை சீனாவின் ஆதிக்கம் விரியும். கற்பிட்டி இந்தியக் கரைகளில் இருந்து கிட்டத்தட்ட 36 கடல்மைல் தொலைவில் உள்ளது. எனவே, கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்பொழுது 400 கடல்மைல் தொலைவில் இருக்கும் சீனாவை 36 கடல் மைல் தொலைவுக்குக் கொண்டுவர இந்தியா விரும்புமா என்று அக்கட்டுரையில் தயான் ஜயதிலக்க ஆராய்ந்திருந்தார்.

அக்கட்டுரை எழுதப்பட்ட காலகட்டம் வேறு. இப்பொழுது நிலைமை தலைகீழாகி விட்டது. இலங்கை தீவுக்குள் சீனா ஏற்கனவே இறங்கிவிட்டது. எனவே, சீன விரிவாக்கத்தின் வார்த்தைகளில் சொன்னால் இந்திய-இலங்கை உடன்படிக்கை எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது. எனவே இந்திய-இலங்கை உடன்படிக்கையை ஒரு கருவியாக எப்படிக் கையாள்வது?

அதுதான் முடியாது. இப்பொழுது இலங்கை இந்திய உடன்படிக்கையின் அடிப்படை அம்சமாகிய இந்திய மேலாண்மை சம்பந்தப்பட்ட விடயங்களில் அந்த உடன்படிக்கை காலாவதி ஆகிவிட்டது. ஆனால், அந்த உடன்படிக்கையில் உள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற ஒரேயொரு விடயத்தில்தான் அந்த உடன்படிக்கை இப்போதும் உயிரோடு இருக்கிறது.

உயிரியல் பாடப் புத்தகங்களில் ஒரு வார்த்தை உண்டு. பதாங்க உறுப்பு. அதாவது கூர்ப்பின் போக்கில் சில உறுப்புகள் படிப்படியாக இல்லாமல் போய்விடும். எனினும், அவற்றின் எச்சங்கள் ஏதோ ஒரு வடிவத்தில் மிஞ்சியிருக்கும்.

உதாரணமாக, முள்ளந்தண்டின் கீழ் முனை. இது வாலின் பதாங்க உறுப்பு என்று அழைக்கப்படுவதுண்டு. அப்படித்தான், இல்லாமல் போன இந்திய-இலங்கை உடன்படிக்கையின் ஒரே பதாங்க உறுப்பாக 13ஆவது திருத்தம் மிஞ்சியிருக்கிறது. ஆனால், அந்த 13ஆவது திருத்தமும் உடன்படிக்கையில் ஒப்புக்கொண்ட உள்ளுடனோடு இல்லை. அது ஒரு கோறை. அதனுள் உள்ளவற்றை ஜெயவர்த்தனா தொடங்கி பின்வந்த எல்லா ஜனாதிபதிகளும் தோண்டி எடுத்துவிட்டார்கள். ஒரு கோதாக மாறியிருக்கும் அந்தத் திருத்தத்தை வைத்துக்கொண்டு இந்தியா என்ன செய்யப்போகிறது? என்ன செய்ய முடியும்?

இந்திய-இலங்கை உடன்படிக்கை உருவான காலகட்டத்தில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இருந்தது. ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இலங்கைக்கு இந்தியாவை நோக்கிப் போகவேண்டிய தேவை இருந்தது. ஆயுதப் போராட்டத்தின் விளைவே இந்திய-இலங்கை உடன்படிக்கை. ஆயுதப் போராட்டத்தின் விளைவே மாகாண சபைகள். எனவே ஆயுதப் போராட்டம் இருந்த வரையிலும் இலங்கை தீவின் மீது இந்தியாவுக்கு ஒரு பிடி இருந்தது. இப்பொழுது அந்தப் பிடி இல்லை. ஷ

தமிழ் மக்களிடம் எந்தவொரு எதிர்ப்பு சக்தியும் கிடையாது. தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டு தமது சொந்தக் கட்சிகளால் சிதறடிக்கப்பட்டு புலப்பெயர்ச்சியால் நீர்த்துப்போய் சிதறுண்டு காணப்படும் ஒரு காலகட்டம் இது. தனிச் சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்குக்  கிட்ட வரமுடியும் என்ற நம்பிக்கையை பெற்று ராஜபக்ஷக்கள் அசுர பலத்தோடு இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்திருக்கும் ஒரு காலகட்டம் இது.

இக்காலகட்டத்தில் இந்தியாவால் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு பிரயோகித்தது போல அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியுமா? அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க இந்தியா விரும்புமா?

இந்திய-இலங்கை உடன்படிக்கை உருவான காலகட்டத்தில் நமது பாடப் புத்தகங்களில் ஏசியா பசிபிக் என்று அழைக்கப்பட்ட பிராந்தியம் இப்பொழுது விரிவாக்கப்பட்டு  இந்தோ பசிபிக் பிராந்தியம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, சீனாவைச் சுற்றி வளைக்கும் விதத்தில் ஏசியா பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் இணைக்கப்பட்டுவிட்டது.

இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் இந்திய-இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலத்தில் ஏசியா பசிபிக் பிராந்திய யதார்த்தமே இருந்தது. ஆனால், இப்பொழுது இந்தோ பசிபிக் பிராந்திய யதார்த்தமும் பட்டியும் பாதையும் என்ற உலகளாவிய யதார்த்தமும் வளர்ந்துவிட்டன.

இப்படியாக, மாறியிருக்கும் உலக மற்றும் பிராந்திய சூழலில் இந்தியாவானது இலங்கை தீவின் மீது தன் பிடியை இழந்து வருகிறதா? அதனால்தான் அழுத்த பிரயோகத்திற்குப் பதிலாக நிதி உதவிகளின் மூலம் இலங்கை தீவை தனது செல்வாக்கு வளையத்துக்குள் கொண்டுவர முயற்சிக்கிறதா?

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபின் இதுவரை இந்தியா, இலங்கைக்கு 960 கோடி டொலர்களை கடனாகக் கொடுத்திருக்கிறது. அண்மையில் மேலும் 400 கோடி டொலர் பெறுமதிக்கு இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் பணமாற்று ஒப்பந்தத்துக்கு இணங்கியுள்ளன.  இன்னும் ஆயிரம் கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தம் பற்றியும் பேச்சசுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மதம் சம்பந்தப்பட்ட உறவுகளை பலப்படுத்துவதற்கு இந்தியா இலங்கைக்கு 15 கோடி டொலர்களை வழங்கும் என்று சில வாரங்களுக்கு முன்பு நடந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் உறுதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவின் கடன் உதவிகளைத் தொகுத்துப் பார்த்தால் சீனாவைப் போலவே இந்தியாவும் கடனைக் கொடுத்து இலங்கை தீவை தன் வழிக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றதா? அதாவது, அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நிலையில் இந்தியா இல்லையா? அவ்வாறு தனது செல்வாக்கைப் பிரயோகிப்பதற்கு இச்சிறிய தீவில் இந்தியாவுக்குப் பிடி ஏதும் இல்லையா? அல்லது மிஞ்சி இருக்கும் ஒரே பலவீனமான பிடி இனப் பிரச்சினை மட்டும்தானா?

பகிரவும்...