Main Menu

தமிழரின் கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட வர்கள் மக்கள் பிரதி நிதிகளாக வேண்டும்

தமிழரின் வருங்காலம், கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் இனிவரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அப்போதுதான், தேசியக் கட்சிகளதும் அதனுடன் சேர்ந்த கட்சிகளதும் செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் வாரம் ஒரு கேள்வியில், இந்த வாரம் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தேசியக் கட்சிகளில் இருந்தும் அவற்றைச் சார்ந்த கட்சிகளில் இருந்து தெரிவாகப் போகின்றவர்கள் தமிழர்களே. அந்த வகையில் ஆறுதல் கொள்ள நினைத்தாலும் கிழக்கில் தமிழர் அல்லாதோரே பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதன் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் பணம் பெற்று வேலை வழங்கும் படலங்களும் தென்னவர்களின் கூடிய முதலீடுகளும், வைத்தியசாலைகள், பாடசாலைகள், அரசாங்க திணைக்களங்கள் போன்றவற்றில் கூடிய பெரும்பான்மையினர் உள்ளடக்கங்களும் நடைபெறும். அவற்றைத் தேசியக் கட்சிகளும் அவற்றின் சார்ப்புக் கட்சிகளும் தடுக்க முடியாமல் போய்விடும்.

அவர்கள் வடக்கில் தமிழர்கள் என்றாலும் கிழக்கில் பல்லினத்தவர்கள். அவர்கள் யாவரும் அவர்களின் கட்சியின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தது தமிழ் பேசும் மக்களின் வாக்குகளினாலாகும். இதுவரை அவர் எமது தமிழ் மக்களுக்கான எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றியுள்ளாரா? மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கும் நடவடிக்கைகளையே அவர் நடைமுறைப்படுத்தி வந்துள்ளார்.

அதேபோல் எமது தேசியக் கட்சிகளின் தமிழ் உறுப்பினர்களும் அவை சார்ந்த கட்சிகளின் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த போதும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த முடியாமலே போயுள்ளது.

எகவே, தமிழரின் வருங்காலம், கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் இனிவரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ” என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...