Main Menu

தமிழக மந்திரி சபை மாற்றப் படுகிறது- உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்?

அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் உறுதியாக இருக்கும் என்று சில தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலின்பிரபலமானவர்களின் வாரிசாக இருப்பவர்களுக்கு பலமும் கிடைக்கும் பலவீனமும் உண்டாகும். தங்களது தனித்துவத்தை முன்னிலை நிறுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ள வாரிசாக இருப்பவர்கள் கடுமையான சவால்களை சந்தித்து போராட வேண்டியது இருக்கும். அதில் எதிர் நீச்சல் போடுபவர்கள் மட்டுமே கரை சேர முடியும். அதற்கு மிக சிறந்த உதாரணமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சொல்லலாம்.

அவரது வழியை பின்பற்றி தமிழக அரசியலில் முத்திரை பதித்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தற்போது அத்தகைய சவால்கள் எழுந்துள்ளன. 44 வயதாகும் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு தனித்துவமான திறமைகளை கொண்டவர். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பத்திரிகையாளர், அரசியல்வாதி என்று பல்வேறு விதமான திறமைகளுக்கு சொந்தக்காரர்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் அவர் தமிழ் திரையுலகில் நடிகராக வலம்வந்து கொண்டு இருக்கிறார். இதுவரை 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 2 படங்கள் கைவசம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அவரது அரசியல் பயணம் மிக தீவிரமாக தொடங்கியது.

தாத்தா, தந்தை வழியில் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த அவரது ரத்தத்தில் இயற்கையாகவே அரசியல் ஆர்வம் கலந்து இருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அரசியலில் ஒவ்வொரு கோணத்தையும் மிகச்சிறிய வயதிலேயே நேரில் பார்த்து அனுபவப்பட்டு விட்ட அவர் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் பிரசார பீரங்கியாகவே மாறினார்.

அந்த தேர்தலில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து 39 தொகுதிகளிலும் ஓட்டு வேட்டையாடினார். அதன் பலனாக தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. அதற்கு பரிசாக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி தி.மு.க இளைஞரணித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

தி.மு.க. இளைஞர் அணியில் புதிய வேகத்தை அவர் ஏற்படுத்தினார். தமிழகம் முழுவதும் இளைஞரணி இதுவரை இல்லாத அளவிற்கு உத்வேகம் பெற்றது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் இது எதிரொலித்தது. பல தொகுதிகளில் இளைஞரணிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் திருவல்லிகேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுமார் 93 ஆயிரம் வாக்குகளை அவர் அள்ளினார். அதாவது மொத்த வாக்குப் பதிவில் 68 சதவீதம் பேர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர். அப்போதே அவரது இந்த வெற்றி திரும்பி பார்க்க வைத்திருந்தது.

மக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலினுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பதை அந்த தேர்தல் முடிவு காட்டியது. எனவே அமைச்சரவையில் அவர் இடம் பெறுவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவருக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்து வருகிறது.

கடந்த மாதம் 27-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய போது தி.மு.க. மூத்த தலைவர்கள் அவரை உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று வாழ்த்தினார்கள். கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பல அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். அன்று முதல் உதயநிதி ஸ்டாலின் எப்போது அமைச்சராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தின் அரசியல் சாசன விதிப்படி மொத்த எம்.எல்.ஏ.க்களில் 15 சதவீதம் பேர் தான் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் முதல்-அமைச்சரையும் சேர்த்து 34 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். தற்போது 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் தமிழக அமைச்சரவையை சற்று மாற்ற வேண்டிய நிர்பந்தம் உருவாகும்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானது. தற்போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவைக்குள் கொண்டுவர மந்திரி சபையை மாற்ற ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த மந்திரி சபை மாற்றம் எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க இயலவில்லை. ஆனால் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் உறுதியாக இருக்கும் என்று சில தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பை ஏற்பார் என்று இளைஞரணி நிர்வாகிகள் நம்பிக்கையோடு தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதும் உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்ளாட்சித் துறையை அவர் பெறுவார் என்று கூறப்படுகிறது.

பகிரவும்...