Main Menu

ஜேர்மனியில் முக்கிய சுற்றுலா நகரம் முடக்கப்பட்டது

கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து தெற்கு ஜேர்மனியின் முக்கிய சுற்றுலா தளமான பகுதியில் புதிய முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி ஒஸ்திரியாவின் எல்லையில் உள்ள பெர்ச்ச்டெஸ்கடனர் லேண்டின் 105,000 மக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

ஐரோப்பாவின் பெரும்பகுதியைப் போலவே, ஜேர்மனியும் கொரோனா தொற்றினால் பாரிய உயர்வினை கண்டுள்ளது. இருப்பினும் தற்போது அங்கு காணப்படும் நிலைமை மற்ற முக்கிய மேற்கு ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களில் மொத்தம் 100,000 பேருக்கு கொரோனா தொற்று ஜேர்மனியில் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பவேரியா மாநிலத்தின் ஒரு பகுதியான பெர்ச்ச்டெஸ்கடனர் லேண்டில் உள்ளூர் தொற்று வீதம் கடந்த வாரத்தில் 100,000 பேருக்கு 273 ஐ எட்டியுள்ளது. இதன் காரணமாக முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாடசாலைகள், உணவகங்கள்,மதுபான நிலையங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி நிலையங்கள், சினிமாக்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும், ஆனால் தேவாலயங்களில் பிரார்த்தனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா நகரமான பெர்ச்ச்டெஸ்கடனுக்கு வருபவர்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜேர்மனிய அதிபர் அங்கலா மேர்க்கெல் ஜேர்மனியர்களிடம் தங்கள் சமூக தொடர்புகளை குறைக்குமாறும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...