Main Menu

ஜெருசலேமில் பயங்கர கலவரம் – 205 பாலஸ்தீனியர்கள் படுகாயம்

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.அப்போது இந்த மசூதியின் முற்றத்தில் இஸ்ரேலிய போலீஸ் படைகள் நுழைந்து, தொழுகையில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது ரப்பர் தோட்டாக்களை வெடித்தனர். கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேல் போலீஸ் படைகளுக்கும், தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.இந்த மோதலில் 205 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்தனர். 6 இஸ்ரேல் போலீசாரும் படுகாயம் அடைந்தனர்.

‘தி ரெட் கிரசன்ட்’ அமைப்பினர், சம்பவ இடத்திலேயே ஒரு கள ஆஸ்பத்திரியை திறந்து, மோதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

தொழுகைக்கு பின்னர் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கலவரம் செய்ததாகவும், அதை ஒடுக்குவதற்காகத்தான் தாங்கள் ரப்பர் தோட்டாக்களை வெடித்ததாகவும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதாகவும் இஸ்ரேல் போலீஸ் படையினர் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடம் போர்க்களம் போல காணப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பகிரவும்...