Main Menu

ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும்- ஆறுமுகசாமி பேச்சு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி கலந்து கொண்டு பேசினார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்த அறிக்கையில் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்தனர். அதில் சந்தேகம் உள்ளது என நான் எதற்காக கூறினேன் என்றால் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினைதான் மிக முக்கிய பிரச்சினையாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஆஞ்ஜியோகிராம் செய்திருக்க வேண்டும். ஆனால் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதுதான் எனது கேள்வி. மேலும் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் வெஜிடேஷியன் என்ற கால்சியம் டெபாசிட்டர் மற்றும் இதயத்தில் சிறிய துவாரமும் இருந்துள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாக இருந்துள்ளது. 3 மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை தேவை இல்லையென்று கூறினார்கள் என்றும், ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறியதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், மருத்துவர்கள் செரியன், கிரிநாத் ஆகியோர் ஜெயலலிதாவைப் பார்த்ததற்கான அறிகுறிகள் இல்லை. மருத்துவர் ஸ்ரீதர் அவ்வாறு நான் சொல்லவில்லை என்று சாட்சியம் சொன்னதன் அடிப்படையிலும், மருத்துவர் மேத்தீவ் சாமுவேல் அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லவில்லை என சாட்சியம் அளித்ததன், அடிப்படையிலேயே எய்ம்ஸ் மருத்துவனையின் அறிக்கையை நிராகரித்தேன். இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையை நான் குறைகூறவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையை நிராகரித்துள்ளீர்களே நீங்கள் மருத்துவரா, உங்களால் எவ்வாறு இந்த முடிவுக்கு வர முடிந்தது என்று சிலர் கேட்கின்றனர். நானும் சட்டக்கல்லூரியில் படித்து பலருடன் பழகி உள்ளேன். பல வழக்குகளை சந்திப்பதில் ஏற்பட்ட அனுபவம் தான் என்னால் சரியான காரணங்களை கூற முடிகிறது. அதனால் மாணவர்களும் நன்றாக படித்து பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அடுத்து பயணிக்கும் இலக்கு நன்றாக இருக்க வேண்டும். அதற்கு நல்ல படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். ஒரு பெண்ணானவள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் ஒரு உயிரை இந்த உலகத்துக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற சேக்ஸ்பியரின் பொன்மொழிக்கேற்றார்போல், ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும். மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...