Main Menu

சென்னையில் 79 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை- ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

முகக்கவசம் அணிபவர்களிலும் கணிசமானவர்கள் அதை உரிய முறைப்படி அணிவதில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் தாடை பகுதிகளில் முகக்கவசத்தை தொங்க விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனாவை தடுக்க பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் சென்னைவாசிகளில் பெரும்பாலானவர்கள் இந்த வி‌ஷயத்தில் மிக மிக அலட்சியமாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொடங்கியபோது வீட்டை விட்டு வெளியே வரும்போது தவறாமல் முகக்கவசம் அணிந்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா குறைந்ததும் மக்களிடம் பயம் நீங்கியதால் முகக்கவசம் அணிவதை கைவிட்டு விட்டனர். சென்னை மக்கள் முகக்கவசம் அணியும் விசயத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், சென்னை மாநகராட்சியும் ஒருங்கிணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.

கடந்த மாதம் இறுதியில் ஒரு வாரம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகளிலும், பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நேற்று இந்த ஆய்வு முடிவுகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டது.

சென்னையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது முகக்கவசம் அணிவதில்லை என்ற அதிர்ச்சியான தகவல் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. குடிசை பகுதிகளில் வசிப்பவர்களில் சுமார் 79 சதவீதம் பேர் முகக்கவசத்தை தொடுவதே இல்லை.

அதுபோல மற்ற பகுதிகளில் வசிப்பவர்களில் சுமார் 73 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை. சராசரியாக வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

முகக்கவசம் அணிபவர்களிலும் கணிசமானவர்கள் அதை உரிய முறைப்படி அணிவதில்லை. மூக்கு மற்றும் வாய் பகுதியை கண்டிப்பாக முகக்கவசம் மூடி இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் பெரும்பாலானவர்கள் தாடை பகுதிகளில் முகக்கவசத்தை தொங்க விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வீட்டை விட்டு வெளியே செல்பவர்களில் குடிசைவாசிகள் 56 சதவீதம் பேரும், வசதிபடைத்தவர்களில் 53 சதவீதம் பேரும் முகக்கவசத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை. மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு வருபவர்களும் முகக்கவசத்தை சரியானபடி பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

முகக்கவசம் தொடர்பான இந்த ஆய்வு சென்னையில் 64 தெருக்களில் நடத்தப்பட்டது. அங்கு பெரும்பாலானவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என தெரிய வந்துள்ளது. காய்கறி கடைகளில் மக்கள் அருகருகே நின்று பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவில்லை என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் சென்னை மாநகராட்சி இதேபோன்ற ஆய்வை நடத்தி இருந்தது. அப்போது இருந்ததை விட தற்போது முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பகிரவும்...