Main Menu

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மோட்டார் சைக்கிளில் 2 பேர் செல்ல தடை

கொரோனா முழு ஊரடங்கை மதிக்காமல் மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் சர்வசாதாரணமாக வெளியில் சுற்றுவது வாடிக்கையாகி உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் வாகனங்களில் பொதுமக்கள் வெளியில் சுற்றுவது அதிகரித்து உள்ளது.

இதுபோன்று வெளியில் சுற்றுபவர்கள் மீது தினமும் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 3,744 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4,461 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. முகக்கவசம் அணியாத 3,592 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 387 பேர் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது.

விதிமுறைகளை மீறிய 89 கடைகள் மூடப்பட்டு ரூ.10 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கோப்புப்படம்

கொரோனா முழு ஊரடங்கை மதிக்காமல் மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் சர்வசாதாரணமாக வெளியில் சுற்றுவது வாடிக்கையாகி உள்ளது. இளைஞர்கள் சிலர் 3 பேர் வரையிலும் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். இது போன்று சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் பயணிப்பதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது சென்னையில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் செல்லக்கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஒரு சிலர் மனைவியை ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் செல்வார்கள், அவர்களையும் நிறுத்தி இதுபோன்று செல்லக்கூடாது. அவசரம் என்றால் ஒருவர் மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறோம்.

ஆனால் தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் வெளியில் சுற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றத்திற்காக வழக்கு போடப்படுகிறது. பல இளைஞர்கள் முகக்கவசத்தை சரியாக அணியாமல் மிகவும் நெருக்கமாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு செல்கிறார்கள். அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் வெளியில் மோட்டார் சைக்கிளில் அவசிய தேவைக்காக வந்தால் ஒருவர் மட்டுமே வர வேண்டும். அதனை மீறி மோட்டார் சைக்கிளின் பின்னால் அவசிய தேவை இல்லாமல் யாரையும் அழைத்து வரக்கூடாது.

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி அவசியம் என்பதால் இந்த நடவடிக்கையை தற்போது மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஊரடங்கின்போதும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் செல்வதற்கு போலீசார் தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...