Main Menu

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக மாறும் இலங்கை

நாட்டிற்கு வருகை தரும்  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்சியாக  மூன்றாவது மாதமாக பெப்ரவரியில் 2  இலட்சத்தை கடந்துள்ளது.

இதன் மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் 218,350 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் காட்டுகின்றது.

2023 ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, வருடாந்த சுற்றுலா பயணிகளின் வருகை  102.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 29 ஆம் திகதி வரை மொத்தமாக  426, 603 சுற்றுலாப் பயணிகளின் வருக தந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 210, 352  சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர். அதேசமயம்,  ஜனவரி மாதம்  208, 253  சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  எக்ஸ் தளத்தில் ,  இலங்கை சுற்றுலாத்துறைக்கு 2024 ஆம் ஆண்டு  “இரண்டு அற்புதமான மாதங்கள்” என்று குறிப்பிட்டார்.

ஆயினும், பெப்ரவரி மாதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தவறவிடப்பட்டுள்ளது. 220,091 என்ற குறைந்த சூழ்நிலை எதிர்பார்ப்பு, மற்றும் 238, 614 இன் மேல் சூழ்நிலை ஆகிய இரண்டிலும் வருகை எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.

பெப்ரவரி மாதத்திற்கான வாராந்திர சுற்றுலா பயணிகளின் வருகை சராசரியாக 54,500 ஆக அதிகரித்துள்ளன.  அதேவேளை, நாளாந்த வருகை சராசரியாக 7,500 ஆகும்.

இதேவேளை, கொவிட் வைரஸ் தொற்றுக்கு  பின்னர்  முதல் முறையாக பெப்ரவரி 24  ஆம் திகதி அன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டிற்கு பெப்ரவரி மாதம் அதிகளாவன சுற்றுலா பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 15 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 14 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

மேலும் மொத்த வருகையில் 9 சதவீதத்தை ஐக்கிய இராச்சியம் கொண்டுள்ளது.

ஏனையவை சந்தைகளில் ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், போலந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

சுற்றுலாத் துறையானது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க ஆர்வமாக இருக்கும் அதே வேளையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் ஒரு பகுதியினர் வணிகத்தில் ஈடுபடுவது, பெரும்பாலும் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன, இது பங்குதாரர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாகும்.

பகிரவும்...