Main Menu

சீன ஜனாதிபதி ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகம்!

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் இரண்டாவது பொருளாதார சக்தியான சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங், காலநிலை உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

சீன ஜனாதிபதி இந்த உச்சி மாநாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று அறிவுறுத்தப்பட்டதாக பிரித்தானிய அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

எனினும், சீன அதிகாரிகள் திட்டங்களை மாற்றுவதை முற்றிலும் நிராகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் பயணத் திட்டங்கள் குறித்து சீன அதிகாரிகள் உறுதியாக இல்லை என்றும், உச்சிமாநாட்டை ஆச்சரியப்படுத்த சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், தனது மனதை மாற்றி கடைசி நேரத்தில் வர முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் பயணத் திட்டங்களை கடைசி நேரத்தில் சீனா அடிக்கடி அறிவிப்பதாக இராஜதந்திரிகள் கூறினர்.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று கருதப்படுகிறது.

2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு, எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை கிளாஸ்கோவில் நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டில், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் உலகளாவிய வெப்பநிலை உயர்வைக் குறைப்பது பற்றி விவாதிக்க வேண்டும்.

பகிரவும்...