Main Menu

சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்றால் ஏன் பாகிஸ்தானுடன் நடத்தக் கூடாது _ பரூக் அப்துல்லா கேள்வி!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசாங்கம் ஏன் ஜம்மு – காஷ்மீர் பிரச்சினைத் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டப் பின்னர் சுமார் 6 மாத காலமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், ஒருவருடத்திற்கு பின் மக்களவையில் கருத்து தெரிவித்தார். இதன்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ஜம்மு – காஷ்மீரில் அதிகாரிகள் 4ஜி சேவையை இரத்து செய்தப்பின்னர் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. இந்த சேவை இரத்து செய்யப்பட்டமை மாணவர்கள், வர்த்தகர்களின் நலனுக்கு எதிராகவுள்ளது.

அத்துடன் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து மோதல்கள் நீடித்து வருகின்றன. மக்கள் மடிவதும் தொடர்ந்தும் இடம்பெறுகிறது. சீனாவுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு தான் கிழக்கு லடாக்கில் தனது படைகளை சீனா மீளப்பெற்றது.

சீனாவுடன் எல்லை விவகாரம் குறித்து பேச முடியும் என்றால் ஏன் அயல் நாடான பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பகிரவும்...