Main Menu

தென்னிலங்கை அரசியல் தரப்புக்களிடம் அவதானமாக இருக்குமாறு தமிழ் கட்சிகளுக்கு சரவணபவன் எச்சரிக்கை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரத்தில் ஒன்றிணைந்துள்ள தமிழ் கட்சிகளைப் பிளவுப்படுத்த தென்னிலங்கை அரசியல் தரப்புக்களின் எடுபிடிகள் முயற்சிக்கலாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் ஈ.சரவணபவன் மேலும் கூறியுள்ளதாவது, “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால், தமிழர் தாயகத்தில் மிகப் பெரிய மாற்றம் நடந்தேறியிருக்கின்றது.

தமிழ்த் தேசியத்தை உயிர்நாடியாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓர் புள்ளியில் இணைந்துள்ளன. ஆயுதப் போராட்டத்தின் பின்னரான தமிழரசியலில் பிரிவுகளால் தமிழ் மக்கள் வெந்து வெதும்பி வெறுத்துபோயிருந்த சூழலில், இந்த ஒற்றுமை என்பது புதியதொரு ஒளிக்கீற்றாய் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது.

இந்த ஒற்றுமை இன்னமும் வலுப்படவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் இதயத்தில் இருத்திக் கொள்ளவேண்டும். இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதற்கு, கட்சிகளைப் பிளவுபடுத்தி அதில் வெற்றிகாணும் தென்னிலங்கை அரசியல் தரப்புக்களின் எடுபிடிகள் முயற்சிகளை முன்னெடுப்பார்கள். தமிழ் கட்சிகள் அவதானமாகச் செயற்படவேண்டும்.

மேலும், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு,அரசு மிரண்டுபோயுள்ளது. அதனால்தான் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய, நினைவேந்தலுக்கான தடையை அரசு விதிக்கவில்லை. அங்குள்ள நீதிமன்றங்களே விதித்துள்ளன என்று கூறுகின்றார்.

அவர் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். நீதிமன்றங்களில் நினைவேந்தலுக்கான தடையைக் கோரியது பொலிஸார், அவர்கள் அரசின் ஓர் அங்கம். பொலிஸார் ஊடாக நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளைப் பெற்றுவிட்டு, அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஹெகலிய முற்படக் கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...