Main Menu

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நியாயமாகாது : வேல்ட் விஷன் லங்கா அமைப்பு கண்டனம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் வெகுவாக கவனம் செலுத்தியிருப்பதுடன், எத்தகையதொரு சூழ்நிலையிலும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நியாயமாகாது என்று வேல்ட் விஷன் லங்கா அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

இவ்விடயம் தொடர்பில் வேல்ட் விஷன் லங்கா அமைப்பு இன்று செவ்வாய்கிழமை(07.01.2020) அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் வெகுவாக கவனம் செலுத்தியுள்ள அதேவேளை, அவை குறித்து மிகுந்த கவலையடைகின்றோம். சிறுவர்களை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பு என்ற அடிப்படையில் எத்தகையதொரு சூழ்நிலையிலும் சிறுவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் நியாயமாகாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

சிறுவயதில் பாதிப்பான அனுபவங்களைக் கொண்டிருத்தல் பிள்ளையொன்றின் நலனிலும், விருத்தியிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சிறுவயதில் கொடிய சித்திரவதைகளை அனுபவிக்கும் பிள்ளையொன்று வளர்ந்ததும் வன்முறையை அங்கீகரிக்கிறது. இந்நிலை நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் நேரடியாகப் பாதிக்கிறது. சிறுவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி இலக்கமான 1929 இற்கு 9000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

எனவே இத்தகையதொரு பின்னணியில் சிறுவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு பெரியவரும் தம்மால் இயன்ற அதியுச்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறுவர் மீதான வன்முறை தொடர்பில் அறிந்துகொள்ளும் பட்சத்தில் அதுகுறித்து விரைந்து செயற்பட்டு, உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

பகிரவும்...