Main Menu

‘சார்லி ஹெப்டோ’ படுகொலை – சந்தேக நபர்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரான்ஸின் கேலிப் பத்திரிகையான ‘சார்லி ஹெப்டோ’ மீது கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 14 பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், குறித்த சர்ச்சைக்குரிய முகமது நபியின் கேலிச்சித்திரத்தை அந்தப் பத்திரிகை நேற்று மீண்டும் மறுபதிப்பு செய்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி இந்த பத்திரிக்கை அலுவலகத்தில் இரண்டு இஸ்லாமியவாத தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அதன் 12 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் இந்த இதழின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் மற்றும் நான்கு கேலிச் சித்திர வரைஞர்களும் உள்ளடக்கம்.

தாக்குதல் நடத்திய இருவர் சையது கோச்சி மற்றும் செரீப் கோச்சி ஆகிய சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டனர். பொலிஸாரின் நடவடிக்கை ஒன்றில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து சில நாட்களில் பாரிசில் நடந்த இன்னொரு தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ‘சார்லி ஹெப்டோ’ அலுவலகங்கள், யூதர்களின் பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஒரு பொலிஸார் மீது தாக்குதல் ஆகிய சம்பவங்களில் ஆயுதம் வழங்கியது, உதவிகள் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் 14 பேர் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களின் மூன்று பேர் மீதான விசாரணை, அவர்கள் பிரான்சில் இல்லாமலேயே நடக்கிறது. அந்த மூன்று பேரும் வடக்கு சிரியா அல்லது ஈராக்கிற்கு தப்பி ஓடிவிட்டதாக கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவங்களில் உயிர் தப்பியவர்களும் நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளிப்பார்கள் என்று பிரான்சின் ஆர்எஃப்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணை சென்ற மார்ச் மாதமே தொடங்க இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. நவம்பர் மாதம் இந்த நீதிமன்ற விசாரணை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...