Main Menu

கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவே காரணம் – வெளிவந்த தகவல்

கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவுதான் காரணம் என்று கருப்புப் பெட்டிமூலம் தெரியவந்துள்ளது.

விமான விபத்துக் காட்சிகள், விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விமானத்தின் இறுதிக்கட்ட தகவல் பரிமாற்றம் அடங்கிய கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் புதிய திருப்பமாக, விமானி தன்னிச்சையாக விமான நிலையத்தின் மேற்குப்புறம் உள்ள 10 ஆம் எண் ஓடுதளத்தை தவறாகத் தேர்ந்தெடுத்ததுதான் விபத்துக்குக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்குப் பக்கம் உள்ள 28 ஆம் எண் ஓடுதளம் தான் விமான நிலையத்தின் முதன்மையான ஓடுதளமாகும். வழக்கமாக இந்த ஓடுதளம் தான் மோசமான வானிலை நிலவும்போதும் பயன்படுத்தப்படும்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் உத்தரவுப்படி 28ஆம் எண் ஓடுதளத்தில் தான் விமானத்தைத் தரையிறக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், மழை காரணமாக ஓடுதளம் சரியாகப் பார்வைக்குத் தெரியாததால் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்ட விமானி மீண்டும் டேக் ஆஃப் செய்து பறந்துள்ளார்.

இதையடுத்து இரண்டாவது முயற்சியாக விமானியே தன்னிச்சையாக முடிவெடுத்து 10 ஆம் ஓடுதளத்தில் தரையிறங்கினார். போயிங் 747 – 800 ரக விமானம் 15 நாட்டிகல் மைல் காற்று வேகத்திலும் தாக்குப்பிடிக்கும் என்பதால் விமானி இந்த முடிவை எடுத்ததாகத் கூறப்படுகிறது.

ஆனால், விமானி எதிர்பார்த்தபடி விமானத்தின் வேகம் குறையவில்லை. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்தைத் தவிர்க்க மீண்டும் டேக் ஆஃப் செய்ய முயற்சி செய்துள்ளார். விமானியின் இந்த அதீத தன்னம்பிக்கையே விமான விபத்துக்குக் காரணம் என்று கருப்புப் பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 150இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...