Main Menu

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கி பின்னடைவுகளை நிவர்த்தி செய்வோம்

அரசியல் பொருளாதாரம் சமூக ரீதியாக பின் அடைந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முதல் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்கி அதன் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்த அந்த பின்னடைவுகளை நிவர்த்தி செய்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம். 

அதன்படி எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் நாடு பூராகவும் பயணம் செய்து தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா இளைஞர் முன்னனியின் வருடாந்த மாநாடு நுவரெலியா ஏன்ஞல் பார்க் விடுதியில் நேற்று (21) நடைபெற்றது. இவ் வைபவத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி ரத்நாயக்க புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த உட்பட இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர், அண்மையில் நுவரெலியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு பாரிய குற்றச் சாட்டை அதாவது பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் அம்பாந்தோட்டை நகருக்கும் நுவரெலியா நகருக்கும் புதிய வைத்தியசாலையை நெதர்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இதனை செய்யாமல் தடுப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பாக தான் அன்று அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றது ஒரு பெரும் பொய் குற்றச்சாட்டாக நான் கருதுகின்றேன். 

ஏனென்றால் அன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த நான் நுவரெலியாவில் அபிவிருத்திகளுக்காக போராடியவன் என்ற வகையில் அதற்காக அமைச்சரவை பத்திரங்களை தாக்கல் செய்து அபிவிருத்தியை முழுக்க முழுக்க நுவரெலியாவிற்கு கொண்டு வந்தவன் நான் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். 

அதுமட்டுமல்லாமல் எங்களுடைய காலத்தில் இங்கு இருக்கின்ற பொருளாதார மத்திய நிலையம் மாவட்ட செயலகம் புதிய பொலிஸ் நிலையம் புதிய பஸ் தரிப்பிடம் என பல்வேறு அபிவிருத்திகளை இங்கு நுவரெலியாவிற்கு கொண்டு வந்ததில் பெரும் பங்கு என்னுடையதாக இருந்தது என்பதை இந்த மக்கள் அறிவார்கள். அது மாத்திரமல்ல கிரகரி வாவியை சுற்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக நாங்கள் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொண்டு அதனையும் அபிவிருத்தி செய்தோம். 

இப்படி பல்வேறு அபிவிருத்திகளை நாங்கள் எங்களுடைய காலகட்டத்தில் செய்திருக்கின்றோம் என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இன்று இளைஞர்களுக்கு இந்த நாட்டில் பாரிய பொறுப்பு இருக்கின்றது. எதிர்காலத்தில் இந்த நாட்டை வளமிக்க நாடாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் பொறுப்பு அந்த இளைஞர்களிடம் இருக்கின்றது. 

எனவே இங்கே கூடியிருக்கின்ற இளைஞர்கள் அனைவரும் அந்த எதிர்கால திட்டத்தை மையமாகக் கொண்டு அந்த திட்டத்தை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைந்திருக்கின்றது. இளைஞர்களை பொறுத்த அளவிலே இந்த கட்சியை வளர்த்து அதன் மூலமாக அடுத்த தேர்தலில் எங்கள் ஊடாக ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும். 

அதன் மூலமாக எங்களுடைய இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் வெறுமனே இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதைப்போல பொய்யான வாக்குறுதிகளை இளைஞர்களுக்கு நாங்கள் வழங்கமாட்டோம். அவர் தேர்தலுக்கு முன்பு இளைஞர்களுக்கு தங்கச் சங்கிலி பெற்றுத் தருவதாக சொன்னார். இலவச WIFI வசதி பெற்றுக் கொடுப்பதாக சொன்னார். கார் பெற்றுக் கொடுப்பதாக சொன்னார். அது மட்டுமில்லாமல் இன்னும் என்னென்னமோ சலுகைகள் இளைஞர்களுக்கு வழங்குவதாக சொன்னார். 

ஆனால் இன்று அந்த எதுவுமே நடைபெறவில்லை என்பதை இந்த நாட்டில் இருக்கின்ற இளைஞர்கள் நன்கு உணர்ந்து இருக்கின்றார்கள். அதன் காரணமாகவே எங்களுடைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி எங்கெல்லாம் கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றதோ எங்கெல்லாம் இளைஞர்களை சந்திப்பதற்கு தயாராகிறதோ அங்கெல்லாம் இளைஞர்களும் யுவதிகளும் பொதுமக்களும் திரண்டு வந்து ஆதரவு கொடுக்கின்றார்கள். 

இந்த நாட்டிலே இறுதியாக முடிந்த தேர்தலில் எங்களுடைய கட்சி 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று இருக்கின்றது. நாங்கள் இந்த கட்சியைவளர்த்து வருகின்றோம். இந்த கட்சி ஆரம்பிக்கப் பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே பல்வேறு வெற்றிகளை சந்தித்திருக்கின்றது. மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை இந்த பொதுஜன பெரமுன கட்சி பெற்றிருக்கின்றது. இந்த கட்சியின் மீது இன்று நாட்டில் தமிழர்கள் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் நம்பிக்கை வைத்து செயல்பட கூடிய வகையிலே இந்த கட்சி தற்போது படிப்படியாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது. வளர்ச;சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. 

இந்த பயணத்தில் எங்களோடு இணைந்து இருக்கின்ற இளைஞர்கள் அனைவருக்கும் நாங்கள் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியதும் முதலாவதாக அவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தருவதே எங்களுடைய முதலாவது கடமையாக இருக்கின்றது. இன்று நாட்டில் பல அபிவிருத்திகள் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உரிய மருந்துகள் இல்லை வைத்தியசாலைகளில் உரிய வசதிகள் இல்லை இதற்கெல்லாம் காரணம் இன்றைய சுகாதார அமைச்சர் என்று சொன்னால் அது மிகையாகாது. 

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இன்னும் ஐந்து மாத காலத்தில் மக்கள் புதிய ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தங்களுடைய வாக்குகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் எங்களுடைய கட்சிக்கு கிடைக்காது என்ற ஒரு பொய்யான வதந்தியை ஒரு சிலர் பரப்பி வருகின்றார்கள். அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை இன்று நிதர்சனமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. 

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எங்களுக்கு முஸ்லிம்களும், தமிழர்களும் சிறுபான்மைகள் மக்கள் சார்பாக வாக்களித்திருக்கிறார்கள். கடந்த காலங்களிலும் எங்களுக்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு இருந்து வந்திருக்கின்றது எனவே அடுத்த தேர்தலிலும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு முழுமையாக எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. 

அந்த அடிப்படையிலேயே திட்டமிட்டு நாங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றோம் எல்லோரும் கூறுவது போல இந்த நாட்டிற்கு ஒரு சிறந்த தலைமைத்துவத்தையும் சிறந்த ஒரு வழிகாட்டலையும் காட்டக்கூடிய ஒரு தலைவர் என்றால் அது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவிருக்கின்ற அரசாங்கம் அல்லது மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசாங்கம் என்பதுதான் உண்மை. அதனையே இன்று பலரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு சிலருக்கு ஜனாதிபதி ஆசை வந்து இருக்கின்றது. வீடுகளை கட்டிக் கொண்டு இருக்கின்ற அமைச்சருக்கும் அந்த ஆசை வந்து இருக்கின்றது. அவருக்கு மட்டுமல்ல அவருடைய மனைவிக்கும் இந்த ஆசை ஏற்பட்டு இருக்கின்றது. அவர்களைத் தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று ஜனாதிபதி ஆசை பலருக்கு வந்திருக்கிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலே நான் தான் போட்டியிட போகின்றேன் என பலரும் முண்டியடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

ஆனால் எங்களைப் பொறுத்த அளவிலே அப்படி ஒரு பிரச்சினையே இல்லை மஹிந்த ராஜபக்ஷ யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துகின்றாரோ அவருக்கு நாங்கள் எல்லோரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அவரை வெற்றிபெறச் செய்வோம். எந்த ஒரு நாட்டிலும் தலைவராக இருக்கின்றவர் மக்களை வழி நடத்துகின்றவர். சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். அந்த நிலைமை இன்றைய ஜனாதிபதியிடம் இல்லை என்று தான் கூற வேண்டும். 

அதற்கு காரணம் அவர் கொண்டு வருகின்ற எல்லா சட்டங்களும் அவருடைய கட்சிக்குள்ளேயும் ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளேயும் எதிரான கருத்துக்களை உருவாக்கி இருக்கிறது. இதன் காரணமாக பல சட்டங்களை கொண்டு வந்த வேகத்திலேயே மீண்டும் திரும்பிச் செல்வதற்கான நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு சரியான விடயம் அல்ல காரணம் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருக்கின்றவர் தீர்மானங்களை சரியாகவும் சிந்தித்தும் உரிய நேரத்தில் எடுக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியாது. அதனை செய்கின்ற திறமையும் சக்தியும் இருக்கிறது என்றால் அது எங்களுடைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கே என்பதை நான் இந்த சந்தர்ப்பத்திலே கூறிவைக்க விரும்புகின்றேன். 

நான் விபரம் தெரிந்த காலம் முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இருக்கின்றேன். ஆனால் கடந்த சில காலங்களாக நான் அந்த கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை ஆரம்பித்து அதனை தற்போது படிப்படியாக வளர்த்து வருகின்றோம். 

நிச்சயமாக அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைப்போம் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. எனவே தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் அனைத்து மதத்தினரும் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த நாட்டில் இளைஞர்கள் எங்களோடு இணைந்து கொண்டு பயணிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன். 

அப்படி செய்வோமாக இருந்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் இந்த நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டு செல்வதில் எந்தவிதமான தடங்கலும் இருக்காது. அதற்கு இளைஞர்களுடைய பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது எனவே இளைஞர்களே யுவதிகளே நீங்கள் அனைவரும் எங´களோடு இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பகிரவும்...