Main Menu

கொரோனா வைரஸ் காற்றில் எவ்வளவு காலம் வாழ்கிறது?- நிபுணர்கள் புதிய கோணங்களில் ஆராய்ச்சி

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காற்றில் எவ்வளவு காலம் வாழ்கிறது? என்பதை கண்டறிய நிபுணர்கள் புதிய கோணங்களில் ஆராய்ச்சி செய்ய உள்ளனர்.

அபுதாபி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபியில் உள்ள கலீபா பல்கலைக்கழகம் மற்றும் கிளிவெலாண்ட் மருத்துவ நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய ஆராய்ச்சி குழுவை அமைத்துள்ளது. இந்த ஆராய்ச்சி குழுவினர் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளை புதிய கோணங்களில் மேற்கொள்ள உள்ளனர்.

குறிப்பாக முககவசம், கவச உடை உள்ளிட்டவைகளை அணிவதன் மூலம் கொரோனா பரவல் எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது? என்பது குறித்த நுட்பமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக இருட்டான அறையில் புற ஊதாக்கதிர் ஒளியில் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

குறிப்பாக அந்த ஆய்வில் சிலிகான் நானோ துகள்கள் பயன்படுத்தப்பட்டு நோயாளி இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் திரவங்கள் எப்படி பரவி சென்று மற்ற இடங்களில் பரவுகிறது? என சோதனை செய்யப்படும். இதுவரை ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவுவதை கண்டறியும் ஆய்வுகளில் ஒரு நோயாளி இருமும்போது அல்லது தும்மும்போது 6 அடிக்கும் அதிகமான தொலைவில் நிற்கும் நபருக்கும் கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வெளிப்படும் திரவமானது மூடப்பட்ட அறையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக இருந்து வருவதும், 6 அடி தொலைவுக்கு மேல் தொடர்ந்து அந்த கிருமிகளின் பாதிப்பு இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது. ஆனாலும், தற்போது காற்றில் கொரோனா வைரசின் தன்மை எவ்வளவு காலத்திற்கு நீடித்து இருக்கும் அல்லது வாழும்? என்பது குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் காற்றினால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...