Main Menu

கொரோனா தடுப்பு மருந்து – இன்று முதல் மனிதர்களிடம் பரிசோதனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பரவலை தடுக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

ஐதராபாதில் உள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை என்.ஐ.வி. எனப்படும் தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா தொற்றை தடுக்க புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதற்கு ‘கோவாக்சின்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி இரண்டு கட்டமாக சோதனை நடத்தப்படவுள்ளது.

அதற்கமைய முதற்கட்டமாக 375 பேருக்கு இந்த மருந்தை செலுத்தி சோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட 12 மருத்துவமனைகளை ஐ.சி.எம்.ஆர். தெரிது செய்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 100 பேருக்கு இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்படவுள்ளது.

இதற்கு எய்ம்ஸ் நெறிமுறைகள் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பரவலை தடுக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து இன்று முதல் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சமூக மருந்துப்பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சஞ்சய் ராய், “கொரோனாவை தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தப்படவுள்ளது. இந்த சோதனையில் பங்கேற்க தன்னார்வலர்கள் சிலர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் மருந்தை செலுத்தி சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

நீண்ட கால நோய்கள் இல்லாதவர்கள் ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பரிசோதனையில் பங்கேற்கலாம். அவர்கள் தன்னார்வலர்களாக வரவேற்றப்படுகின்றனர். தன்னார்வலர்களாக வருவோர் கொரோனானால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது” என தெரிவித்தார்.

பகிரவும்...