Main Menu

கூவுவதற்கான உரிமையை சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்!

பாரம்பரியமாக இயற்கையுடன் ஒன்றித்து மனித சமூகத்திற்கு பயனுள்ள பறவையாக வாழும் சேவலுக்கு கூவுவதற்கும் சட்டரீதியாக உரிமையை பெற வேண்டிய சூழ்நிலை பிரான்சில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அந்த நாட்டினரிடையே அபூர்வமான வழக்காக பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மொரிஸ் என்கின்ற சர்ச்சைக்குரிய சேவலுக்கு காலையில் கூவுவதற்கான அனுமதியை பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ளது.

கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலின் அடையாளமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மொரிஸ் என்ற இந்த சேவல் தனது காலை வழக்கத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவல் உரிமையாளரின் வீட்டின் அருகில் வசிக்கும் பிரொன், சேவலின் சத்தம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் உள்ள ஒலெரான் எனும் தீவில் உள்ள ஒரு வீட்டிலேயே இந்த சேவல் உள்ளது. ஒலெரான் தீவு, பிரான்ஸில் உள்ள நகரவாசிகள் தங்கள் விடுமுறைக்காக வந்து தங்கும் இடமாக மாறியுள்ளது.

மொரிஸ் தினமும் விடியற்காலையில் கூவுவது, தனக்கு இடையூறாக இருப்பதாக சேவலின் உரிமையாளர்களிடம் ஜீன் லூயிஸ் பிரொன் தெரிவித்தார்.

“இந்த சேவல் அதிகாலை 4.30 மணிக்கு கூவத் தொடங்குகிறது. மேலும் அது காலை முழுவதும், மதிய வேளைகளிலும் கூவிக் கொண்டிருக்கிறது,” என பிரொன் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஃபெசெளவுக்கு 2017 ஆம் ஆண்டு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மொரிஸ், பிரான்ஸின் கிராம மற்றும் நகரவாசிகளுக்கு இடையே ஒரு பதற்றமான சூழலை உருவாக்கிவிட்டது.

சேவலின் உரிமையாளர்கள் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக, பிரொன் இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்.

இந்த வழக்கு துரித கதியில் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது. பிரான்ஸில் நகரமயமாதல் அதிகரித்து வருவதால், கிராமங்களில் அதிகரித்திருக்கும் நகர்புறவாசிகளால் வாழ்வியல் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுகின்றன என்று கூறப்பட்டது.

“கிராமங்கள் இவ்வாறுதான் இருக்கும். நகரவாசிகள் உணர்ந்து செயற்பட வேண்டும். அவர்கள் எதுவும் சொல்லக்கூடாது,” என சேவலின் உரிமையாளர் ஃபெசெள தெரிவித்துள்ளார். “பிரான்ஸ் நாட்டு மக்களின் சார்பாக மொரிஸ் வெற்றிப்பெற்றுள்ளது,” என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் மூலம் மொரிஸ் நாட்டில் பெரும் ஆதரவை பெற்றது. அதனை காப்பாற்ற வேண்டும் என இணையத்தில் 1,40,000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று உருவானது. மேலும் பலர் அதன் முகம் பதித்த டீ- ஷர்ட்டுகளையும் அணியத் தொடங்கியுள்ளனர்.

பகிரவும்...