Main Menu

மகள் படிப்பதற்காக குன்றின்மீது கூடாரம் போட்ட தந்தை

மகள் நல்ல இணையவசதியுடன் படிக்கவேண்டும் என்பதற்காக 20 மீட்டர் உயரம் கொண்ட குன்றின்மீது கூடாரம் போட்டுள்ளார் மலேசியத் தந்தை ஒருவர்.

மோசமான இணையச் சேவை உள்ள கிளந்தான் கிராமத்தில் வசிக்கும் 20-வயது மாணவி, இணையம் வழி நடத்தப்படும் பாடங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தந்தை கூடாரத்தை அமைத்ததாக Bernama செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கூடாரத்தை அமைப்பதற்கு முன் மருத்துவ ஆய்வுத் தொழில்நுட்பம் பயிலும் அந்த மாணவி 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்குச் சென்று, இணையச்சேவை பெற வேண்டியிருந்தது. ஆனால் நிபந்தனையுடன்கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டினால் அவரால் அங்கும் செல்ல முடியவில்லை.

இதைப் பார்த்த தந்தையால் பொறுக்கமுடியவில்லை… உடனடியாகக் கூடாரம் போடும் பணியில் இறங்கினார்.

வீட்டுக்கு 30 மீட்டர் தொலைவில் உள்ள அந்தக் கூடாரத்தில் கம்பிவடமற்ற modem ஒன்றின்மூலம் இணையச் சேவையைப் பெற முடிகிறது.

தினமும் பாடங்களை அல்லது தேர்வுகளை எழுதக் கூடாரத்தில் சுமார் 3 மணிநேரம் செலவிடுவார் மாணவி.

ஆனாலும் பாம்புகள் இருக்கும் குன்றில் சற்று அச்சமாக இருப்பதாய்க் கூறினார் அவர்.

விட்டு விட்டு வரும் இணையச் சேவையைக் கொண்ட கிராமத்தில் தேர்வு எழுதுவது பதற்றமாக இருப்பதாகவும் கூறினார் பெண்.

தடைபடும் சேவையினால் தேர்வில் கொடுக்கப்படும் நேரம் போதுமானதல்ல என்றும், இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் தேர்வை முடிப்பதற்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சொன்னார்.

சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மற்ற மாணவர்களும் இதே நிலைமையை எதிர்கொள்வதாய்க் கூறினார் அவரது தந்தை.  

பகிரவும்...