Main Menu

17 ஆண்டுகளாக பாம்பு புற்றுக்காக பூர்வீக வீட்டை கொடுத்த குடும்பத்தினர்

தஞ்சை அருகே பூர்வீக வீட்டில் பாம்பு புற்று இருந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக பாம்பிற்காக தாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு மற்றொரு வீட்டில் குடியேறி வசித்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோயில், மணல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வய 36). பட்டு புடவை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (36).

இந்த நிலையில் வசந்திக்கும் அவரது சகோதரர் வெங்கட்ராஜனுக்கும் (33) சொந்தமான, பூர்வீக ஓட்டு வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் உள்பகுதியில் பெரிய அளவில் பாம்பு புற்று இருந்து வந்தது.

இதில் நல்ல பாம்பு இருப்பதால், அந்த பாம்பிற்காக 17 ஆண்டுகளாக, வீட்டில் வசிக்காமல், அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார்கள்.

பாம்பிற்காக பூர்வீக வீட்டையே கொடுத்த அவர்களை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பாராட்டி வருகின்றனர்.

பாம்புக்காக வீட்டை கொடுத்தது குறித்து வசந்தி கூறியதாவது;-

பாம்பு புற்று உள்ள வீடு எங்களது பூர்வீக வீடு ஆகும். வீட்டின் உத்தரத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்தது. எங்களது பெற்றோருக்கு, குடியிருக்கிற வீட்டில் நல்ல பாம்பு வருகிறதே? வீட்டில் பிள்ளைகள் இருக்கிறது என அதை அடித்து கொன்று விட்டனர்.

அதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து, வீட்டிற்குள்ளேயே மீண்டும் புற்று ஒன்று உருவாகி, நன்றாக பெரியதாகி விட்டது. அதில் நல்ல பாம்பு ஒன்று மீண்டும் வந்து விட்டது. ஆனால் யாரையும் எந்த தொந்தரவும் செய்யவில்லை. சரி, இனிமேல் நாம் பாம்பிற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என, எனது அம்மாவும், அப்பாவும் முடிவு செய்து, வீட்டை காலி செய்தனர்.

பாம்பு புற்று இருக்கும் வீடு.

பின்னர் பக்கத்தில் எங்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டிற்கு சென்று விட்டோம்.

பின்னர் புற்றிற்கு மஞ்சள் தெளித்து சாமியாக வணங்க ஆரம்பித்தோம். பலரும் பாம்பிற்காக வீட்டை சும்மா போட்டு வைத்திருக்கிறீர்களே? என கேட்பார்கள். புற்றை இடித்து விட்டு வீட்டை வாடகைக்கு விடுங்கள் என்றும் தெரிவித்தனர். இதில் எனக்கும் எனது தம்பிக்கும் விருப்பம் இல்லை. பெரியவர்கள் செய்ததை நாங்களும் தொடர்கிறோம்.

புற்றில் தினமும் பால் ஊற்றி, வணங்கி வருகிறோம். தற்போது பலரும் பாம்பு புற்றுக்கு மஞ்சள் தெளித்தும், விளக்கு ஏற்றியும் வணங்கி செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...