Main Menu

காஸ்ஸெம் சோலேமானீ கொலை விவகாரம்: உளவு பார்த்தவருக்கு தூக்கு தண்டனை!

ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மொழிபெயர்ப்பாளரான மஹ்மூத் மவுசவி-மஜ்த் தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் அமைப்புடன், தொடர்பு கொண்டிருந்த மஜ்த், ஆயுதங்கள், தொலைத்தொடர்பு அமைப்புகள், தளபதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அவர்களின் பயணங்கள் பற்றிய விபரங்களை உளவு பார்க்கவும் வெளிப்படுத்தியத்திற்கு ஈடாக அமெரிக்க டொலர்களைப் பெற்றதாக ஈரானிய கண்காணிப்பில் தெரியவந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அவர் நேற்று (திங்கட்கிழமை) தூக்கிலிடப்பட்டதாக ஈரானின் நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தளபதி காஸ்ஸெம் சோலேமானீ கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல் முறையாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், ஈராக் அதிகாரிகளின் கார்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இதில், ஈரான் உயர்மட்டத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ மற்றும் ஈராக்கின் ஹஷீத் அல்-ஷாபி இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் படி, ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கையாக இவர்கள் குறிவைக்கப்பட்டதாக பின்னர் அமெரிக்க இராணுவம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் காஸ்ஸெம் சோலேமானீ கொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் 30 பேர் மீது ஈரான் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

பகிரவும்...