Main Menu

காஷ்மீரில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் ஷெல் தாக்குதலை நடத்துவதாக இந்தியா குற்றச்சாட்டு

காஷ்மீரில் சர்வதேச எல்லையோரக் கிராமங்களில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாவது, “பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மான்கோட் செக்டரில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலை ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரு தரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல் அதிகாலை 4மணியளவில் நிறுத்தப்பட்டது.

அதேவேளை,  ஹிரானகர் செக்டரில் சர்வதேச எல்லையில், சிறிய ஆயுதங்களுடன் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு இரவு முழுவதும் தொடர்ந்தது. இதில் இந்தியத் தரப்பில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.

கரோல் கிருஷ்ணா, சத்பால் மற்றும் குர்ணம் ஆகிய இடங்களில் எல்லைப்புறக் காவல் நிலையங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் பாகிஸ்தான் இராணுவத்தினர், துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து இந்தியத் தரப்பில் எல்லைக் காவலில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை பணியாளர்கள் கடும் பதிலடி கொடுத்தனர்.

இப்பகுதிகளில் இன்று அதிகாலை 5.10மணி வரை இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. பாகிஸ்தான் இராணுவத்தின் துப்பாக்கிச் சூடு எல்லைப்புற மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நிலத்தடிப் பதுங்குக் குழிகளில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...