Main Menu

தமிழ் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் ஸ்தாபன ரீதியாக செயற்பட முடிவு!

தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் ஸ்தாபன ரீதியாகச் செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவ்வாறு செயற்படுவது தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் கூடி கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், தமிழ் தேசியப் பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இன்று மீண்டும் கூடி ஆராய்ந்தோம். இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கட்சிகள் ஸ்தாபன ரீதியாக செயற்பட வேண்டும் என கலந்துகொண்ட அனைத்து பிரதிநிதிகளும் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

அதற்காக நாம் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அமைப்பு ரீதியாக எவ்வாறு நாம் செயற்பட வேண்டும். எவ்வாறு நாம் ஸ்தாபன ரீதியாக அமைய வேண்டும் என அந்தக் குழு ஆராயவுள்ளது. அவர்கள் எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.

அதன்பின்னர், நாம் அந்த அறிக்கை தொடர்பாக ஆராயவுள்ளோம். மேலும், இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

எனினும், நாம் தமிழ் தேசியப் பரப்பில் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றாக இயங்குவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசவுள்ளோம்.

மேலும், தமிழர்கள் எதிர்நோக்குகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழ் தேசியப் பரப்பில் இயங்குகின்ற நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து பயணிப்பது என தீர்மானித்துள்ளோம். குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக எந்தவொரு பிரச்சினைகள் எழுந்தாலும் அனைத்து கட்சிகளும் உடனடியாக ஒன்றுகூடி தீர்மானங்களை எடுத்து ஓரணியில் பயணிப்பது என தீர்மானித்துள்ளோம்.

20ஆம் திருத்தம் தற்போது பேசுபொருளாக உள்ளது. அந்த இருபதாவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தில் அந்தந்தக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி அதனை எதிர்ப்பார்கள் என நான் நம்புகின்றேன்” என்றார்.

பகிரவும்...