Main Menu

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா மறுப்பு

காங்கிரஸ் பதவியை ஏற்க விரும்ப வில்லை என்று பிரியங்கா காந்தி கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வர முடியாதபடி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார்.

இதன் காரணமாக கடந்த 2½ மாதமாக காங்கிரஸ் கட்சி, தலைவர் இல்லாமல் உள்ளது. இது காங்கிரஸ் நிர்வாக செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வந்தால் நீடிக்க முடியாது என்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பலரும் தலைமை பொறுப்பை ஏற்க மறுத்துள்ளனர். அதே சமயத்தில் ராகுல் காந்தியும் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறி விட்டார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால் அது முடிந்த பிறகு செயற்குழு கூட்டத்தை கூட்டலாம் என்று தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் 7-ந்தேதி நிறைவு பெறுகிறது. எனவே 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதிக்குள் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் மூன்று மூத்த தலைவர்களின் பெயரை ஓட்டெடுப்புக்கு விட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்காவை தலைவர் ஆக்கலாம் என்று பஞ்சாப் முதல்-மந்திரி கேப்டன் அம்ரீந்தர்சிங் தெரிவித்தார். அதை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ஆதரித்தார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் பதவியை ஏற்க விரும்ப வில்லை என்று பிரியங்கா கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டு தனது பெயரை தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே தலைவர் பதவி போட்டியில் பிரியங்கா இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

இதற்கிடையே அடுத்த வாரம் கூட இருக்கும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தற்காலிக காங்கிரஸ் தலைவர் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் தலித் இனத்தைச் சேர்ந்த முகுல்வாஸ்னிக் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதுபோல சுசில்குமார் ஷிண்டே, ராஜஸ்தான் முதல்- மந்திரி அசோக்கெலாட், இளம் தலைவர்கள் சச்சின் பைலட், ஜோதிர்ராஜசிந்தியா ஆகியோரது பெயரும் காங்கிரஸ் தற்காலிக தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. சில வாரங்கள் கழித்து காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

புதிய தலைவர் தேர்தல் ஓட்டெடுப்பு முறையில் நடத்தப்படுமா? அல்லது சோனியா நியமனம் செய்யும் வகையில் நடைபெறுமா? என்பது தெரியவில்லை.

பகிரவும்...