Main Menu

கறுப்பு ஜுலை 1983 படுகொலைகளின் 36 வருடங்கள்

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று 36 ஆண்டுகளாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் படுகாய மடைந்தார்கள்.

தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி தமிழர்கள் மீது தாக்குதல் களை  சிங்கள இன வெறியர்கள் நடத் தினார்கள். 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி அஞ்சல் பெட்டிச் சந்தியில் 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் நாள் நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக இராணு வத்தினர் பயணம் செய்த வாகனங்களின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வழி மடக்குத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப் பட்டார்கள்.

ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடை பெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலப் பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிகழ்வு…

அந்நிகழ்வில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச் சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடி யாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத் தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

இறந்த இராணுவத்தினருடைய சடலங்களுக்கு கொழும்பு பொரளையில் உள்ள கனத்தையில் இறுதிநிகழ்வுகள் செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்ப வில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இது பின்னர் கலவரமாக வெடித்தது.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பவுத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்து விட்டார்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப் புலிகள் வந்து விட்டார்கள் என்றும் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தி களையடுத்து, கொழும்பு நகரின் பல இடங் களிலும், ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.

இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாகத் தமிழர்கள் கொல்லப்பட்ட தாகவும் செய்திகள் வெளியாயின. இக் கலவரங்களில் சுமார் 3000 ஆயிரம்பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப் பீடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் கொல் லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.

நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்ட சிங்களர்கள் கைதிகளாக இருந்த கொழும்பு வெலிக்கடைச்சிறையில், மற்றொரு பகுதியில் அரசியல் கைதிகளாக தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். வெளியே கலவரம் ஏற்பட்டிருந்த நிலையில் சிறைக்காவலர்களாக இருந்த சிங்களர்களால், தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கதவு திறக்கப்பட்டு, சிங்களக்கைதிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை

அரசியல் கைதிகளாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

மரண தண்டனை விதிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் குட்டிமணி தான் இறந்த பின்னர் தன்னுடைய கண்களை எடுத்து பார்வையில்லாத ஒருவருக்கு பொருத்தி சுதந்திர தமிழ் ஈழத்தைக் காண விரும்பு வதாகக் கூறினார். ஆனால், சிங்களக் கைதிகள் சிறையிலேயே குட்டிமணியைத் தாக்கி கொலை செய்து, அவருடைய கண்களைப் பிடுங்கி நசுக்கிய கொடுமை அன்றைய நாளில் நடைபெற்றது.

உலக வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக சிறைச்சாலைப் படு கொலையாக இது பார்க்கப்படுகின்றது.

பின்னாளில் பல அரசியல் திருப் பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன் முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரண மும் வழங்கப்படவில்லை.

இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக் கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வ மான எந்த நடவடிக்கைகளும் பின்னர் வந்த அரசுகளாலும் மேற்கொள்ளப்படவில்லை.

36 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இனக்கலவர வன்முறைகள் குறிப்பிட்ட தமிழினத்தை முற்றிலுமாக அழிப்பதற்கான நடவடிக்கையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் கருதப்படுகிறது

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் நாளில் இலங்கை தலைநகர் கொழும்புவில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள காடையர் கும்பலால் நடத்தப்பட்ட கலவரத்தினால் ஏறத்தாழ 2000க்கு மேற் பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கபட்டனர். ஆனால் அரசாங்க புள்ளி விவரங்கள் வெறும் 471 பேர் என்று குறிப்பிடுகின்றன. 

தலைநகரில் மட்டும் ஏறத்தாழ 3700 கடைகள், எண்ணுக்கணக்கற்ற தமிழர்களின் வீடுகள் உடைக்கபட்டும், எரிக்கப்பட்டும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 

இதற்கு காரணம் தமிழ் போராளிக் குழுக்களின் தாக்குதலில் 13 இலங்கை இராணுவப் படையினர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டதே ஆகும். 
இராணுவத்துக்கும், போராளிகளுக்கும் இடையில் யுத்தத்தில் படையினர் கொல்லப் பட்டால் அதன் கோபத்தை, அப்பாவி மக்கள் மீது காட்டும் கோழைத்தனமான, தமது கேவலமான பழிவாங்கலாக திட்ட மிட்டு நடத்தப்பட்ட கலவரங்கலாகும் இவை!

தமிழ் குழந்தைகள் எரியும் தார் பீப் பாயிகளில் போடப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழ் பெண்களின் மார்பில் சுடு தாரால் ”ஸ்ரீ” என எழுதப்பட்டது. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப் பட்டனர். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக்கிழித்து குழந்தையை எடுத்து நெருப்பில் போட்டனர். உயிருடன் கொளுத்தப்பட்ட தமிழர்கள் பலர். இவ்வாறு இன்னும் சொல்ல முடியாத பல கொடுமைகள் சிங்களவர்களால் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டன.

தமிழன் உயிர்வாழ விரும்பினால் தமக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று ஆயுதம் தூக்க வழிவகுத்தது இந்த 1983 ஜூலை. வரலாற்றில் கருப்பு ஜூலை என்று குறிப்பிடப்படுகிறது.

பட்ட துன்பங்களை மறக்க கூடாது. இதை அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். பன்னாட்டளவில் உள்ள தமிழர்கள் இதுகுறித்த உணர்வு களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற அளவில், தமிழர்களுக்கென்று ஒரு நாள் விடியும் என்கிற எதிர்பார்ப்பில் பன்னாட் டளவில் உள்ள தமிழர்கள் காத்திருக் கின்றனர்.

பகிரவும்...