Main Menu

கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா!

குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து பா.ஜனதா கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார்.

எடியூரப்பாவுக்கு கர்நாடக முதல்வராக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.32 மணிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு ஆட்சி செய்தது. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததால் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது.

அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதனால் குமாரசாமி முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா, பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ளதாகக் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்படி 4ஆவது முறையாக கர்நாடகாவின் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார்.

பகிரவும்...