கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்கு உள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்
41 பேரின் உயிரைப் பறித்த கரூர் நெரிசல் விபத்து நிகழ்ந்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இன்று (10) அந்த நகருக்குத் விஜயம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அப்பேரிடரில் தனது பங்கை நியாயப்படுத்தியும், காவல்துறையின் செயல்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியும், முந்தைய திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியும் பேசினார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பணி நியமன ஆவணங்களை வழங்குவதற்காக முதலமைச்சராகக் கரூர் சென்றிருந்த விஜய் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாடல்களை மேற்கொண்டார்.
அந்தத் துயரச் சம்பவத்தை மிகுந்த உணர்ச்சியுடன் இதன்போது நினைவுகூர்ந்த முதலமைச்சர், அந்த இழப்பு ஏற்படுத்திய பாரம் இப்போதும் தன் மனதை அழுத்திக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், உயிரிழப்புகளுக்குத் தனது கட்சிதான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை விஜய் நிராகரித்ததுடன், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது காவல்துறையின் பொறுப்பு என்றும் வாதிட்டார்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த நான் காவல்துறையை நம்பினேன், ஆனாலும் உயிரிழப்புகளுக்கு என் மீது பழி சுமத்தப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நடைபெற்ற விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் பேரணியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது;
அப்பேரணியில் அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர்.
இந்த கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தற்போது மத்திய புலனாய்வுப் பணியகம் (CBI) விசாரணை நடத்தி வருகிறது.
