அதிமுகவில் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் கோரிக்கை
டெல்டா மாவட்டங்களில் அதிமுக வலுப்பெற கட்சியில் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் நேற்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக சார்பில், நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “அரசியலில் தற்போது தவெகவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற சூழலில் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவை வலுப்படுத்த, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்.
இதன்மூலம், அடுத்து வரும் தேர்தல்களை முழு பலத்துடன் அதிமுகவால் எதிர்கொள்ள முடியும். இதுதான் டெல்டா மாவட்டங்களில் உள்ள கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பமாக உள்ளது” என்றனர்.
இதற்கு பதில் அளித்த பழனிசாமி, “டிடிவி தினகரன் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். அவரை எப்படி அழைப்பது?” என பதில் அளித்துள்ளார். வழக்கமாக கூட்டத்தில் தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசினாலே, பழனிசாமி குறுக்கிட்டு, அது முடிந்துபோன விஷயம், கட்சியின் வளர்ச்சி குறித்து பேசுங்கள் என கூறுவார்.
ஆனால் இப்போது, ஒவ்வொரு நிர்வாகியின் கருத்தையும் கவனமாக கேட்டு, பரிசீலித்து வருகிறார் என கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்பிறகு கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
தவெகவின் வெற்றி, சுனாமி அலைபோல திடீரென வந்த வெற்றி. வரும் காலங்களில் அதிமுக மக்களின் ஆதரவைப் பெறும். அதிமுகவின் சாதனைகளை ஒவ்வொரு நிர்வாகியும் மக்களைச் சந்தித்து கூற வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்திலும் அதிமுக வெற்றிபெற வேண்டும். அதை இலக்காகக் கொண்டு தீவிர கட்சிப் பணியாற்றுங்கள் என்று கூறினார். இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
