Main Menu

கறுப்பின இசைத் தயாரிப்பாளரை தாக்கிய மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் மத்தியப் பகுதியில் கறுப்பின இசைத் தயாரிப்பாளர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் அடிப்பதாக காட்டும் காணொளி வெளியானதை அடுத்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம், பிரான்ஸ் பாதுகாப்புப் படைகளின் நடத்தை தொடர்பாக மேலும் ஒரு புதிய சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.
அந்த இசைத் தயாரிப்பாளரின் பெயர் இதுவரை மைக்கேல் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

லூப்சைடர் (Loopsider) என்ற செய்தி இணைய தளம் வெளியிட்ட பாதுகாப்பு காணொளி பதிவில் அந்த கருப்பின இசைத் தயாரிப்பாளர் தமது ஸ்டுடியோவில் நுழைந்ததும் குறிப்பிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளும் குத்துவதும், உதைப்பதும் தெரிகிறது. ஆரம்பத்தில் அந்த நபர் முகக் கவசம் அணியாததற்காக தடுத்து நிறுத்தப்பட்டதாக லூப்சைடர் குறிப்பிடுகிறது.

அந்த ஐந்து நிமிடத் தாக்குதலின் தாம் இனவாத வசைகளுக்கும் இலக்கானதாக மைக்கேல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மைக்கேல் கைது செய்யப்பட்டு, அவர் மீது வன்முறையில் ஈடுபட்டதாகவும், கைது செய்யப்படுவதை எதிர்த்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அரசாங்கத் தரப்பு தற்போது இந்த குற்றச்சாட்டுகளைக் கைவிட்டுவிட்டு, அந்த பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணையைத் தொடக்கியுள்ளது.

இந்த பொலிஸ் அதிகாரிகள் தங்கள் சீருடையை களங்கப்படுத்திவிட்டதாக தொலைக்காட்சியில் கூறிய பிரான்ஸ் உட்துறை அமைச்சர் ஜைரால்ட் டர்மானாங் அவர்களைப் பதவி நீக்க அழுத்தம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்தார்.

பகிரவும்...