Main Menu

கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை- முதல் நாடாக சட்டம் இயற்றியது நியூசிலாந்து

ஒருவேளை துரதிருஷ்டவசமாக பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்கள் பெரும் துன்பத்தை கருத்தில் கொண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

தொழிலாளர் எம்.பி. ஜின்னி ஆண்டர்சன்ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசு அலுவலங்களில் வேலை செய்து வருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெறுவதற்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் இருந்து வருகிறது.

பெண்கள் குழந்தைகளை பெறுவதைத் தவிர மற்றும் சில விஷயங்களிலும் வேலைக்கு வரும்போது கஷ்டப்படும் நிலை உள்ளது. கருவுற்ற சில வாரங்களில் துரதிருஷ்டவசமாக கருச்சிதைவு ஏற்பட்டால், அது பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய வேதனையைக் கொடுக்கும். இந்த வேதனையுடன் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும். அல்லது விடுமுறை எடுக்க வேண்டும். இதனால் கூடுதல் வேதனையுடன் மன அழுத்தமும் ஏற்படும்.

இதை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அரசு ஒருவேளை பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்களுக்கு மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்க முடிவு செய்தது. இதுகுறித்த மசோதா கடந்த புதன்கிழமை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக சட்டம் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்கள் மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பது நடைமுறைக்கு வருகிறது.

இச்சட்டத்தை இயற்றி, செயல்முறைக்கு கொண்டு வரும் முதல் நாடு நியூசிலாந்தாகிறது. இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்த தொழிலாளர் எம்.பி. (Labour MP) ஜின்னி ஆண்டர்சன், ‘‘நாம் உலகில்  முதலாவது நபராக இருக்கும்போது, கடைசி நபராக இருக்கமாட்டோம் என்பதை என்னால் உறுதியாக நம்ப முடியும். நம்நாட்டை பார்த்து மற்ற நாடுகளும் அதன் வேதனையை அறிந்து சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அங்கீகரிக்கும் சட்டத்தை தொடங்குவார்கள்’’ என்றார்.

பகிரவும்...