Main Menu

ஒரு மாத கைக் குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி

ஆந்திரப் பிரதேசத்தில் பணி புரியும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்த ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர்.

இந்தக் காலகட்டத்தில் அரசு மிகத் தீவிரமாகத் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையுடன் தனது பணிக்குத் திரும்பியுள்ளார்.

விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மாளா, 2013 இல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றவர். இவர் தற்போது கைக்குழந்தையுடன் அந்த அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீஜனா, “இது எனது கடமை. இது ஒரு மனிதாபிமான செயல். நிர்வாகத்திற்கு ஏதேனும் வழியில் உதவியாக இருப்பதன் மூலம் எனது பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டிய நேரம் இது என்பதை நான் உணர்ந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசு விதிமுறைப்படி, பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது. ஆனாலும் அவர் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அதுவும் தன் பிஞ்சுக் குழந்தையுடன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவரை இன்றைக்கு சமூக வலைத்தள வாசிகள் பாராட்டி வருகின்றனர்.

பகிரவும்...