Main Menu

ஐ.பி.எல். தொடரை நடத்த தயாராக உள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த தயாராகவுள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நாட்டிற்கு வெளியே நடத்துவதா அல்லது உள்நாட்டிலேயே நடத்துவதா என்பது குறித்து இந்தியா தீர யோசித்து வருகின்றது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த தயாராகவுள்ளதாக, ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சபையின் பொதுச்செயலாளர் முபாஷ்ஷிர் உஸ்மானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ஏற்கனவே ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக (2014ஆம் ஆண்டில் ஆரம்ப கட்ட லீக் போட்டிகள் இங்கு நடந்தது) நடத்தியிருக்கிறோம். அது மட்டுமின்றி கடந்த காலங்களில் இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாடுகளுடைய கிரிக்கெட் நடவடிக்கைகளின் பொதுவான இடமாக இருந்திருப்பதை நிரூபித்து காட்டியிருக்கிறோம்.

நவீனகாலத்திற்கு ஏற்ற விளையாட்டரங்குகளும், வசதி வாய்ப்புகளும் உள்ளதால் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த விரும்பக்கூடிய ஒரு இடமாக இது உள்ளது.

எங்களது மைதானங்களை பயன்படுத்திக் கொள்ள இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நாங்கள் ஏற்கனவே இங்கிலாந்து அணி பங்கேற்ற பல போட்டிகளை இங்கு நடத்தி உள்ளோம். அதனால் அவர்களின் உள்ளூர் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளோம். எங்களது அழைப்பை இவ்விரு நாட்டு கிரிக்கெட் சபைகளில் யார் ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் போட்டிகளை நடத்த மகிழ்ச்சியோடு தயாராக இருக்கிறோம்’ என கூறினார்.

முன்னதாகவே இலங்கை கிரிக்கெட் சபையும், ஐ.பி.எல். தொடரை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, முன்னதாக இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் 13ஆவது பருவகாலத்திற்கான போட்டிகளை மார்ச் 29ஆம் திகதி தொடக்கம் மே 24ஆம் திகதி வரையில் நடத்த தீர்மானித்திருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதற்கட்டமாக ஐ.பி.எல். தொடர், ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஐ.பி.எல். தொடர் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரை நவம்பர் மாதம் நடத்துவதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பகிரவும்...