Main Menu

ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யவே மூன்றாவது அணி – மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பெறச்செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சாடியுள்ளார்.

பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “இந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் தொடர்பான எதிர்ப்பார்ப்புடன் பலரும் இருக்கிறார்கள்.

ஆனால், மூன்றாவது வேட்பாளர் ஒருவர் களமிறங்கியுள்ளமையானது வெற்றிபெற அல்ல என்பதை நான் மக்களிடம் கூறிக்கொள்கிறேன்.

இந்த மூன்றாவது வேட்பாளருக்கு ஒரு வேட்பாளரைத் தோற்கடிக்கவோ அல்லது ஒரு வேட்பாளரை வெற்றி பெறச்செய்யவோ வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருக்கிறது. கடந்த 4 வருடங்களாக இந்த அரசாங்கத்தை யார் பாதுகாத்து வந்தார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த அரசாங்கத்தை நாடாளுமன்றில் தோற்கடிக்க பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அரசாங்கத்தை யார் பாதுகாத்தது என்பதை மக்களும் அறிவார்கள். இந்தத் தரப்பினருக்கு ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருக்கிறது.

இதனால் அவர்களுக்குத் தேவையான சலுகைகைளும் வரப்பிரசாரங்களும் கிடைக்கின்றன என்றே நாம் நம்புகிறோம்.

கடந்த 4 வருடங்களாக இந்த அரசாங்கம் நாட்டுக்காக எதையும் செய்யவில்லை. மாறாக நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்ததே மிச்சமாக இருக்கிறது.

எமது தேசிய பாதுகாப்பும் இன்று கேள்விக் குறியாகியுள்ளது. வரலாற்றில் முதன் முறையாக மத ஸ்தலங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த யுகத்தை யாரும் மறக்கக்கூடாது. இதனை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் பொறுப்பில்தான் நாம் இன்று காணப்படுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...