Main Menu

அமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்!

அமேசன் காடுகளில் கடந்த 48 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவது தெரியவந்துள்ளது.

பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தினால் எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில் அமேசன் காடுகளில் 88 ஆயிரத்து 816 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இவற்றில் 51 சதவீதத்திற்கும் அதிகமான தீ விபத்து அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டதாக பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமேசன் காடுகளில் தீ விபத்து ஏற்படுவதற்கு பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோவே முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த காலங்களை விட நடப்பாண்டு வெப்பநிலை குறைவாக இருந்ததாகவும், அமேசன் பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிடும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அமேசன் காடுகளில் இயற்கையாக தீப்பிடிக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக நிலம்தேவை என குறிப்பிட்டுள்ள பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ, கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டு தீ விபத்து சராசரிக்கும் சற்று குறைவாக இருப்பதாக தனது முகநூலில் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சைகளை தோற்று வித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...