Main Menu

எந்த பெண்ணும் பலாத் காரத்துக்கு இனி ஒருபோதும் ஆளாகக் கூடாது- தமிழிசை

எந்த பெண்ணும் பலாத்காரத்துக்கு இனி ஒருபோதும் ஆளாகக் கூடாது. இதை ஆளுநராக அல்ல ஒரு சகோதரியாக கேட்கிறேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒரு பெண் உடல் முழுவதும் நகை அணிந்து நடு இரவில் வெளியே சென்று, கவனமாக வீடு திரும்பினால் அதுதான் உண்மையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தி கூறினார்.

ஆனால் இன்று பொன் நகை அணியவேண்டாம், புன்னகையுடன் ஒரு பெண் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப முடியவில்லை.

இளைஞர்கள் பெண்களை, சின்னாபின்னமாக்கி எரிக்கிறார்கள் என்றால் அதை தாங்க முடியவில்லை. இனி இந்த கொடுமைகள் அனுமதிக்கப்படக் கூடாது என்றால் நாம் முதலில் மனிதர்களாக இருக்க வேண்டும். பெண்கள் எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு வரவேண்டும்.

பெண் சிசுக்கொலை அதிகரித்ததை தொடர்ந்து ‘ஸ்கேன்’ செய்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை கண்டறிய தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இன்று பிறப்பதற்கு உரிமை கொடுத்து, குத்துவிளக்காக பெண்களை பார்ப்பதற்கு பதிலாக கொள்ளி கட்டைகளாக எரித்து சாய்க்கிறோமே இதை அனுமதிக்கலாமா? பெண்கள் வெகுண்டெழ வேண்டும். துணிச்சலோடு இருக்க வேண்டும்.

வாயிலுள்ள பற்களும் பெண்களுக்கு ஆயுதம்தான். இனி எந்த விலங்காவது பெண்களை தவறாக அணுகினால் அவர்கள் கடித்து குதறப்படுவார்கள் என்ற பயம் இருக்க வேண்டும். எந்த பெண்ணையும் தாயாகவும், சகோதரியாகவும் பார்க்கும் நிலை வரவேண்டும். எந்த சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்த்து துணிச்சலோடு போராடும் மனநிலையை பெண்கள் வளர்த்துக்கொள்ளுங்கள்.

நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய சூழலை இந்த நாடு மக்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும். பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் உடனடி தண்டனை வேண்டும். அவர்களுக்கு கருணையே காட்டக்கூடாது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். பெண் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளுங்கள்.

சமீபகால நிகழ்வுகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிலும் ஆபாச படங்கள் பார்ப்பதில் தமிழகம் முதலிடம் எனும் செய்தி இன்னும் வேதனை அளிக்கிறது. ஆபாச படம் பார்ப்பதுதான் பெண்கள் மீதான மரியாதையை குறைக்கிறது.

எனவே பண்பாட்டை காப்பாற்றுங்கள். நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகத்தை முயற்சி செய்யவேண்டாம். கடமையை உணர்ந்து, கல்வி அறிவை வளருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...