Main Menu

ஊழல் குற்றச்சாட்டு – கங்கோ ஜனாதிபதியின் தலைமை அதிகாரிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை

கங்கோ ஜனநாயகக் குடியரசின் நீதிமன்றம் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெக்கெடியின் தலைமை அதிகாரி ஒருவரை ஊழல் குற்றவாளியாகக் கண்டறிந்துள்ளது.

ஏறக்குறைய 50 மில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட, வைட்டல் கமர்ஹேக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (சனிக்கிழமை) தலைநகர் கின்ஷாசாவில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஜனாதிபதி போட்டியில் நிற்பதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் நாடகம் என்று கமர்ஹேவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

கமர்ஹே தனது தண்டனையை முடித்து 10 ஆண்டுகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுவார் என்றும் கூறப்படுகின்றது.

எனவே குறித்த உத்தரவை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்ய கமர்ஹே தரப்பு சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மோசடி செய்யப்பட்ட நிதிகளில் பெரும்பாலானவை ஜனாதிபதி பதவியேற்றதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய நிதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே விசாரணையில் லெபனான் தொழிலதிபர் ஜம்மல் சமீஹிற்கும் 20 ஆண்டுகள் கடூழிய சிறைவாசமும் ஜனாதிபதி அலுவலகத்தில் தளவாடங்களுக்கு பொறுப்பான மூன்றாவது நபர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைவாசமும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய நண்பராக இருந்த கமர்ஹே, கங்கோ ஜனநாயகக் குடியரசின் ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மிக உயர் பதவி வகித்த ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த வழக்கு விசாரணைகளில் தலைமை வகித்த நீதிபதி மே மாதம் கொலை செய்யப்பட்டார் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிரவும்...