Main Menu

ஐரோப்பாவில் முதன்முதலில் தேர்தலில் அடியெடுத்து வைக்கும் சேர்பியர்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 3 மாத முடக்க நிலைக்கு பின்னர் ஐரோப்பிய நாடான சேர்பியாவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த தேர்தலில் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வுசிக்கின் சேர்பிய முற்போக்குக் கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 26 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட குறித்த தேர்தல் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிற்போடப்பட்டது. 250 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் ஆசனங்களை கைப்பற்ற 21 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் கூட்டணிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, வுசிக் கன்சர்வேடிவ் சேர்பிய மக்கள் கட்சி சுமார் 50% வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா தொற்றுநோயை கட்டுபடுத்துவத்தில் அரசாங்கத்தின் திருப்திகரமான நடவடிக்கையால் மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வுசிக்கின் கூட்டணி பங்காளியான சோசலிஸ்ட் கட்சி சுமார் 10% உடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் பெல்கிரேட் நகராட்சியின் மேயரான அலெக்ஸாண்டர் சாபிக் தலைமையிலான எதிர்க்கட்சி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் தேர்தலினை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், கட்சியை பலப்படுத்த அலெக்ஸாண்டர் வுசிக், ஜனாதிபதி பதவியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

7.2 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சேர்பியாவில், இதுவரை 12 ஆயிரத்து 803 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளும் 260 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதன் பின்னர் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மே 22 அன்று அதன் எல்லைகளைத் திறக்கத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடுகளில் இதுவும் ஒன்று என்பதோடு பின்னர் அனைத்து முடக்க நிலையும் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...