Main Menu

ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி தொடங்கியது- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள். குறிப்பாக கோடை சீசனுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், பொழுதை போக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்காட்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி கடந்த 6-ந் தேதி கோத்தகிரி நேருபூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, படகு போட்டிகளும் நடத்தப்பட்டது. கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்கா வில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல ஆயிரம் கொய்மலர்களை கொண்டு 10 மலர் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் அலங்கார வளைவுகள் வழியாக சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், கிரைசாந்திமம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதேபோல் நடைபாதை ஒரங்கள், மலர் பாத்திகளிலும் 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 18 அடி உயரம், 40 அடி அகலத்தில் தேசிய பறவையான மயில் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் இந்த மயில் உருவம் கவர்ந்திழுத்தது. சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். இதுதவிர தமிழ்நாட்டின் மாநில சின்னங்களான வரையாடு, மரகதப்புறா, பனைமரம் போன்ற சிற்பங்களும் பல ஆயிரம் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல வண்ண மலர் கோபுரங்களும் உருவாக்கப்பட்டு இருந்தது. தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், 175-வது ஆண்டு தாவரவியல் பூங்கா, 125வது மலர் கண்காட்சி என மலர்களால் உருவான வாசகங்களும் இடம் பெற்றிருந்தது. சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர். ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம், மஞ்சப்பை விழிப்புணர்வு உருவம் என பலவகையான அலங்காரங்கள் பல ஆயிரம் வண்ண மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இதுதவிர அரசுத்துறை மற்றும் தனியார்த்துறை சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனை வரும் கண்காட்சியில் இடம் பெற்ற மலர்களால் உருவான சிற்பங்களை கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர். கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டதால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஊட்டி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

பகிரவும்...