Main Menu

உலகம் முழுவதும் 422,915 பேரை தாக்கிய கொரோனா!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரசுக்கு தினமும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸூக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 422,915 ஆகும். நேற்று ஒரே நாளில் 41 ஆயிரத்து 371 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் நேற்று 1873 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை உலுக்கி கொண்டிருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. அங்கு நேற்று ஒரே நாளில் 601 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 77 ஆக உயர்ந்தது. மேலும் 4 ஆயிரத்து 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 927 ஆக உள்ளது.

சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 மடங்குக்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 18 டொக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் நேற்று 539 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை 2 ஆயிரத்து 991 பேர் பலியாகி இருக்கிறார்கள். 42 ஆயிரத்து 058 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். ஸ்பெயினில் 3,900 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1102 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். 22 ஆயிரத்து 633 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று புதிதாக 3 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பல்வேறு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு நேற்று ஒரே நாளில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 796 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 10 ஆயிரத்து 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்து 148 ஆக உயர்ந்தது. இதனால் மக்கள் பீதியுடன் உள்ளனர். பல்வேறு மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஈரானில் கொரோனா தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு மேலும் 123 பேர் பலியானார்கள். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1934 ஆக உயர்ந்தது.

இதேபோல் ஜெர்மனியில் 159 பேரும், தென் கொரியாவில் 126 பேரும் சுவிட்சர்லாந்தில் 122 பேரும், நெதர்லாந்தில் 277 பேரும் பெல்ஜியத்தில் 122 பேரும் பலியாகி உள்ளனர்.

அதேபோல் பல்வேறு நாடுகளிலும் உயிர் பலி தொடர்ந்த வண்ணம் உள்ளது.

சீனாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள கொரோனாவுக்கு நேற்று 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். மொத்தம் 3 ஆயிரத்து 281 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் மேலும் 39 பேர் மட்டுமே பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை 81 ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...