Main Menu

கொரோனா வைரஸில் இருந்து தடுக்க ஊரடங்கை நீடிக்க வேண்டும் – ஜே.வி.பி.!

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து முற்றாக விடுபட ஊரடங்கு சட்டத்தை இன்னும் சிறிது காலத்துக்கேனும் நீடிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கொரோனவிக்கு எதிரான செயற்பாடுகளில் வெறுமனே அரசாங்கத்திடம் மாத்திரம் பொறுப்பை கொடுக்காது அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள்  என அனைவரையும்  ஒன்றிணைந்த பொறிமுறை ஒன்றினை கையாள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “உலகவில் மிகவும் மோசமாக பரவிவருகின்ற ஒரு தொற்றுநோய்க்கு முகங்கொடுத்துக்கொண்டுள்ளோம். உலகில் அபிவிருத்தி கண்ட நாடுகள், உலகில் தரமான சுகாதார தன்மைகளை வைத்துள்ளதாக கூறும் நாடுகள்கூட எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் எம் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான ஒரு நெடுக்கடியில்  இருந்து விடுபட வேண்டிய தேவை நாடாகவும், மக்களாகவும் எமக்கு உள்ளது. இது அரசாங்கத்தினால் மட்டுமே செய்து முடிக்கக்கூடிய செயற்பாடு அல்ல. ஆனால் இதனை முன்னின்று செய்து முடிக்கும் தலைமைத்துவத்தை அரசாங்கம் கையில் எடுக்க வேண்டும்.

உலகம் எதிர்கொள்ளும் இந்த நாசகார சூழலை எமது மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்காத வகையில் நாம் அனைவரும் செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல் நாளாந்த வாழ்கையை தடுத்து இவற்றை வெற்றிகொள்ளவும் முடியாது. முதலில் பொதுமக்கள் சிந்தித்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்க கூடிய மனநிலையை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் சுகாதார துறையினர் மிகச் சரியாக செயற்பட்டு தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும். இவ்வாறான சவால்களை வெற்றிகொள்ள பொதுவாக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இதில் பொருளாதார ரீதியிலான, மருத்துவ ரீதியிலான, வயதான சிறுவர்  என அனைவரும் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளது. எனினும் மக்கள் முடிந்தளவு கூட்டம் கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் இப்போது வரையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ள போதிலும் இன்னும் சிறிது காலத்துக்கேனும் ஊரடங்கு சட்டத்தை நீட்டித்து இந்த நிலைமைகளை வெற்றிகொள்ள வேண்டும்.

இதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் இரண்டு பிரச்சினைகள் உள்ளது. ஒன்று நாளந்த உணவு மற்றும் மருத்துவத்தை பெற்றுக்கொள்வது சிரமமாக உள்ளது. ஊரடங்கு சட்ட காலத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை 8 மணிநேரம் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மக்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் காலம் வழங்கப்படுகின்றது.

அது தவிர்ந்து ஊரடங்கு சட்ட காலத்தில் மக்கள் செயற்படும் விதம் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஆகவே ஊரடங்கு சட்ட காலத்தில் மக்களுக்கான தேவைகளை முறையாக தீர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை கையாள வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளினால்  பாதியேனும் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

அத்தடன் நாளாந்த வேலைகளை செய்யும் மக்கள் அவர்களின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. சமுர்த்தி பெரும் குடும்பங்கள், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் குடும்பங்கள் என அனைவருக்கும் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் கருத்தில் கொண்டு மாற்று  வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும்” என கூறினார்,

பகிரவும்...