Main Menu

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் நாடு திரும்ப சம்மதம்- பெற்றோர் தகவல்

உக்ரைன்- ரஷியா இடையே போர் மூழ்ந்தது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர். ஆனால் சாய்நிகேஷ் திரும்பி வரவில்லை.

கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய்நிகேஷ், ரோகித் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் சாய்நிகேஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் பல்வேறு முறை இந்திய ராணுவத்தில் சேர முயற்சித்தார்.

ஆனால் உயரம் குறைவால் ராணுவத்தில் தேர்வாகவில்லை. இதனால், உக்ரைன் நாட்டில் விமானவியல் படித்து வந்தார்.

இதனிடையே உக்ரைன்- ரஷியா இடையே போர் மூழ்ந்தது. இதையடுத்து இந்திய மாணவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர். ஆனால் சாய்நிகேஷ் திரும்பி வரவில்லை. சாய்நிகேஷை அவரது பெற்றோர் தொடர்பு கொண்டு ஊருக்கு அழைத்த போது, அவர் வர மறுப்பு தெரிவித்தார்.

மேலும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை தனக்கு நிறைவேறி விட்டதாகவும், உக்ரைன் துணை ராணுவத்தில் நான் தற்போது சேர்ந்து பணியாற்றி வருகிறேன் என்றும், பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் இந்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் சாய்நிகேஷின் பெற்றோரிடம் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் எப்படியாவது சமாதானம் செய்து தங்களது மகனை இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என சாய்நிகேஷின் பெற்றோர் முடிவு செய்ததாக தெரிகிறது.

அதற்காக பலமுறை அவரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது உக்ரைனில் போர் மூண்டிருக்கும் சூழ்நிலையில் நீ அங்கு இருப்பது சரியாகாது. உடனடியாக நாட்டிற்கு திரும்பி வா என அழைத்துள்ளனர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சாய்நிகேஷின் பெற்றோர் கூறுகையில் “அண்மையில் சாய்நிகேஷை தொடர்புகொண்டு பேசினோம். அங்கு இருக்க கூடிய சூழ்நிலை குறித்தும் எடுத்து கூறி, நாடு திரும்ப கேட்டு கொண்டோம். அவரும் எங்கள் விருப்பத்தை ஏற்று இந்தியாவிற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து நாங்கள் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு எங்கள் மகன் நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என தெரிவித்தோம். அவர்கள் எங்களை பொறுமையுடன் இருக்குமாறும், உங்கள் மகனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர் என்றனர்.

பகிரவும்...