Main Menu

ஈரோடு இடைத்தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. 25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரசாரம் செய்தார். காவிரி நகர் பகுதியில் மேனகாவை ஆதரித்து திமுக பணிமனை அருகே சீமான் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென திமுக – நாம் தமிழர் கட்சியினர் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கற்கள், கட்டைகள் கொண்டு ஒருவர்களை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள்,பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இந்த மோதலில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த கலவரம் காரணமாக சீமான் தேர்தல் பரப்புரையை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். மேலும் அந்த பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதால் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிரவும்...